எழுந்து நடுவே நில்லும்
தாழ்வு மனப்பான்மை என்பது இந்த நவீன உலகத்தில் அதிகரித்து வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. தாழ்வு மனப்பான்மையை வைத்து வியாபாரம் செய்யும் ஒரு குழு, அதனைப் பயன்படுத்தி பணத்திற்கு மேல், பணத்தைச் சம்பாதித்து வருகிறது. தாழ்வு மனப்பான்மை, இந்த சமுதாயத்தில் பல்வேறு குற்றங்கள பெருகவும் காரணமாக அமைந்துவிடுகிறது. இப்படி இந்த உலகம், தாழ்வு மனப்பான்மையினால், சிக்கித்தவிக்கும் சூழ்நிலையில், இயேசுவின் வார்த்தைகள், இந்த எதிர்மறையான மனநிலையைப்போக்கக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
யூத சமுதாயத்தில் நோய்வாய்ப்பட்டவர்கள், ஏழைகள், வறியவர்கள் அனைவருமே பாவிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள். அவர்கள் சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களாகவே கருதப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டன. அவர்கள் இழிவாகப் பார்க்கப்பட்டனர். அவர்கள் பொது இடத்தில் இருப்பதற்கு கூட, அனுமதி மறுக்கப்பட்டனர். இப்படிப்பட்ட பிண்ணனி உள்ள நிலையில், கைசூம்பிப்போன மனிதர் ஒருவரை, ”எழுந்து நடுவே நில்லும்” என்று சொல்கிறார். எழுந்து நிற்பது என்பது சாதாரண வார்த்தையல்ல. அது ஒருவருக்கு அதிகாரத்தைக் கொடுக்கும் வார்த்தை. உரிமையிழந்தவர்களுக்கு, கூனிக்குறுகி இருக்கிறவர்களுக்கு ஆற்றல் கொடுக்கும் வார்த்தை. அந்த வார்த்தை உரிமைகளை இழந்த அந்த மனிதனுக்கு, அனைத்தையும் மீட்டுக் கொடுக்கக்கூடிய வார்த்தையாக இருந்திருக்கும். அதைத்தான் இயேசு செய்கிறார்.
இந்த சமுதாயத்தில் நாம் தாழ்வு மனப்பான்மையோடு இருந்தால், அதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் மதிக்கப்பட தகுதியுள்ளவர்களே. ஏனென்றால், நாம் அனைவருமே, இறைவனின் சாயலைத் தாங்கியிருக்கிறோம். அதனை இயேசு உறுதிப்படுத்துகிறார். நாமும், அதிலிருந்து மீண்டு, இறைஇயேசுவில் உறுதிபெறுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்