எழுந்திடு! எல்லாம் படைத்திடு!
லூக்கா 7:11-17
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
திருச்சபையில் நிறைய வளங்கள் இருக்கின்றன. அந்த வளங்கள் அனைத்தும் முறையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று கேள்வியெழுப்பிப் பார்த்தால் இல்லை என்பதே நாம் பெறும் பதில். மிகவும் குறிப்பாக பயன்படுத்தப்படாத வளம் என்றால் அது இளைஞரின் வளம் என்றே சொல்லலாம். இளைஞர்கள் தங்கள் திறமைகளை ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்தும்போது திருச்சபை உயரத்தை எட்டிப் பிடிக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்லும் “இளைஞனே, எழுந்திடு” என்ற வார்த்தைதைகள் ஒவ்வொரு இளைஞருக்கும் சொல்வதாக அமைகிறது. இளைஞர்கள் எழுந்தால் தான் எல்லாவற்றிலும் மாற்றம் வரும். எங்கும் உண்மை கிடைக்கும். மாற்றமிக்க வளர்ச்சிகள் உதயமாகும். ஆகவே இளைஞர்களே எழும்பி வாருங்கள். இரண்டு விதங்களில் இளைஞர்கள் எழும்ப வேண்டும்.
1. இறப்பிலிருந்து எழுந்திடு!
இளைஞர்களே! நீங்கள் அலைபேசியிலே வாழ்க்கையை நடத்தும்போது இறந்தவர்களுக்கு சமமானவர்கள். வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் மீடியாக்களின் வலைகளில் மாட்டும்போது நீங்கள் செத்தவர்களே. ஏனெனில் அவைகள் உங்கள் சிந்தனைகளை இறக்கச்செய்கிறது. உங்களை உயிரற்றவர்களாக மாற்றுகிறது. இயேசு நற்செய்தி வாசகத்தில் அந்த இளைஞருக்கு உயிர் கொடுத்தார். நீங்களும் இயேசுவிடம் மன்றாடி வெளியே வாருங்கள். இறப்பிலிருந்து எழுந்திடுங்கள். உயிர் பெற்றிடுங்கள். திருச்சபையின் வளர்ச்சிக்காக மிகவும் ஆர்வமாய் உழையுங்கள்.
2. இல்லாததிலிருந்து எழுந்திடு!
சில இளைஞர்கள் என்னிடம் ஒன்றுமில்லை. நான் பயனற்றவன் என்று எண்ணி தங்களை மிகவும் தரக்குறைவாக நினைப்பார்கள். இப்படி இல்லை என்று நினைக்கும் இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண மிகவும் கஷ்டப்படுவார்கள். இந்த நினைப்பை தூரே எறியுங்கள். உங்களை எல்லா திறமையோடும் ஆற்றலோடும் ஆண்டவர் படைத்திருக்கிறார். ஆகவே நீங்கள் தாழ்வானவர்கள் அல்ல தரமானவர்கள். உயரமானவர்கள். எழும்புங்கள். எல்லாவற்றையும் படையுங்கள்.
எழுந்திடு, விழித்திடு ஓ இளைஞனே!
நம்பிக்கை கொண்டு துணிந்து செயல்படு
வலிமையே வாழ்வு, பயமே தாழ்வு
இயேசுவின் பாதையில் நடந்திடு
மனதில் கேட்க…
1. நான் என்னுடைய வளங்களை, திறமைகளை சரியாக பயன்படுத்துகிறேனா?
2. என்னால் திருச்சபை பெற்றிருக்கின்ற வளர்ச்சி என்ன?
மனதில் பதிக்க…
நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கு(1திமொ 4:12)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா