எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்வோம்
நாம் உண்டாலும்,குடித்தாலும்,எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யும் பொழுது ( 1 கொரி 10 : 31 ) நாம் அவருக்கு உகந்தவர்களாக மாறுகிறோம்.நாம் நமக்கென்றே வாழாமல் பிறர்க்கு பயன்தரும் வகையில் வாழ்வோம். நாம் என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நாம் பிறர்க்கு உதவினால் அதை ஆண்டவர் நினைவில் வைத்து நம்முடைய கஷ்ட காலங்களில் வேறொருவரைக் கொண்டு நமக்கு உதவ ஏற்பாடு செய்வார் நம் கருணையே உள்ள ஆண்டவர்.
ஒருநாள் நண்பர்கள் இருவர் தங்கள் பிறந்தநாளை கொண்டாட ஒரு வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக எல்லாவற்றையும் வாங்க ஒரு பைக்கில் போய்க்கொண்டு இருந்த பொழுது ஒரு முதியவர் ஒருவர் அடிப்பட்டு வழியில் விழுந்து கிடந்தார்.நிறைய வாகனம் அதன் வழியே சென்றாலும் யாரும் உதவவில்லை. அவரவர் வேலை அவரவருக்கு முக்கியம். இந்த நண்பர்கள் இருவரும் பார்த்துவிட்டு மனமிரங்கி அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்று சுகாதார மையத்தில் சேர்த்து அவருக்கு பக்கத்திலே இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டனர். அந்த பெரியவரும் சிறிது நேரம் கழித்து கண் விழித்தார். பிறகு அவருடைய வீட்டு விலாசம் வாங்கி அவரின் வீட்டாருக்கு தெரியப்படுத்தி அவ்வீட்டார் அங்கு வந்த பிறகு இவர்கள் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர்.
அதனால் அவர்கள் பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போய்விட்டது. ஆனாலும் தாங்கள் ஒரு உயிரை காப்பாற்றிய சந்தோஷம் அவர்கள் உள்ளத்தை நிரப்பியதால் பிறந்தநாள் கொண்டாட்டத்தைவிட இந்த சந்தோஷமே மேலோங்கி நிற்பதாக நண்பர்கள் இருவரும் அகமகிழ்ந்தனர். இப்பேற்பட்ட காரியத்தையே நம்முடைய ஆண்டவரும் விரும்புகிறார். இதன்மூலம் நாமும் அவரின் மாட்சியை விளங்கச் செய்கிறவர்களாய் காணப்படுகிறோம்.
உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது.கலாத்தியர் 5:14.நாமும் நன்மை செய்வதில் மனம் சோர்ந்து போகாமல் இருப்போமாக: நாம் அப்படி இருந்தால் தக்க காலத்தில் நாம் அறுவடை செய்யலாம். ஆண்டவரின் நாமத்தை மகிமைப்படுத்தலாம்.
ஜெபம்
அன்பின் தகப்பனே! உம்மை போற்றி,துதிக்கிறோம். சோர்ந்து போகாமல் எப்பொழுதும் நன்மை செய்து உமது நாமத்திற்கே புகழ் உண்டாக வாழ எங்களுக்கு போதித்து கற்றுத்தாரும். உம்மைப்போல எல்லோரிடமும் அன்புக்காட்டவும், இரக்கமுள்ளவர்களாய் இருக்கவும் உதவிச் செய்யும். உமது அடிச்சுவட்டை பின்பற்றி நடந்து சாட்சியுள்ள வாழ்க்கை வாழும் படிக்கு எங்கள் உள்ளத்தில் உணர்த்தி வழிநடத்தும் மாட்சிமையும், மகிமையும், புகழையும், வல்லமையையும் உமது ஒருவருக்கே செலுத்துகிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே! ஆமென் !! அல்லேலூயா!!!