எல்லாத்தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்
லூக்கா 1: 47 – 48, 49 – 50, 53 – 54
அன்னை மரியாள் உள்ளப்பூரிப்போடு இந்த பாடலை பாடுகிறார். இந்த பாடல் பழைய ஏற்பாட்டில், எல்கானாவின் மனைவி அன்னா பாடிய பாடல். அந்த பாடலை, அன்னை மரியாளுக்கு ஏற்ற வகையில், லூக்கா நற்செய்தியாளர் பொருத்துகிறார். கடவுளின் மகளை கருத்தாங்கப் போகிற பூரிப்பு, அன்னை மரியாளின் உள்ளத்தில் நிரம்பியிருக்கிறது. அன்னை மரியாள் கலக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியில் பாடுகிறார். ”நான் கன்னி ஆயிற்றே? இது எங்ஙனம் நிகழும்” என்கிற சந்தேகம், வானதூதரால் நிவர்த்தி செய்யப்பட்டவுடன், கடவுளின் மகனைத் தாங்குவதற்கு இறைவன் தனக்கு தந்திருக்கிற, இந்த வாய்ப்பை எண்ணிப் பார்த்து, அவர் மகிழ்ச்சியோடு பாடுகிறார்.
இனி வரக்கூடிய எல்லா தலைமுறையினரும், அன்னை மரியாளைப் போற்றுவர் என்று, எதற்காக அன்னை பாடுகிறார்? அன்னை மரியாள் தன்னை தகுதியற்ற நிலைக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். ஒரு பெண்ணாக, சமூகத்தின் பொருளாதாரப் பார்வையிலும் சாதாரணமானவராக இருக்கிற தனக்கு, இப்படிப்பட்ட வாய்ப்பை இறைவன் தந்திருக்கிறார் என்றால், நிச்சயம் அவருக்கு ஏதோ தகுதி இருக்கிறது, என்று உலகம் நம்பும். ஏனென்றால், இந்த அழைப்பு சாதாரணமானது அல்ல. இறைவனிடமிருந்து வந்தது. இறையழைப்பைப் பெறுகிற அளவுக்கு அன்னை மரியாள், இறைவனின் பார்வையில் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார். எனவே, அவரை இந்த உலகம் நிச்சயம் பாராட்டும் என்று நம்புகிறார்.
இறைவனின் பார்வையில் நாம் தாழ்ச்சியான உள்ளத்தோடு வாழ்ந்தாலே போதும். இறைவன் நம்மை உயர்த்துவார். இறைவன் எப்போதும் நல்லவராக இருக்கிறார். வல்லவராக இருக்கிறார். இறைவனின் பார்வையில் நாமும் நல்லவராக இருக்கிறபோது, இந்த உலகம் நம்மை நினைவில் வைக்கிற அளவிற்கு, இறைவன் நம்மை உயர்த்துவார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்