எலிசாவின் பிடிவாதம்
2அரசர்கள் 2: 1, 6 – 14
1அரசர்கள் புத்தகத்தில் 17 ம் அதிகாரத்தில் எலியாவை காண்கிறோம். குறிப்பாக ஆகாபு அரசருக்கு எதிராக கடவுளின் வார்த்தையை துணிவோடு அறிவித்ததைப் படித்தோம். இரண்டாம் அரசர்கள் புத்தகத்தில் எலியா விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடப்படுகிறது. எலியா, தான் இறைவனால் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படப்போவதை அறிந்தவராக, எலிசாவை அவரைப் பின்தொடராமல் அங்கேயே தங்கியிருக்கச் சொல்கிறார். ஆனால், எலிசா அவரைப்பிரிவதற்கு மனமில்லாதவராக இருக்கிறார். எலிசாவின் பிடிவாதத்தைக் கண்டு, எலியாவும் அவரைப் பின்தொடர்வதற்கு அனுமதிக்கிறார். இங்கு எலிசா, பிடிவாதமாக இறைவாக்கினரைப் பற்றிக் கொள்வதைப் பார்க்கிறோம்.
இறைவாக்கினர் எலிசாவிடம் இருக்க வேண்டிய பண்பானது நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டிய பண்பாக இருக்கிறது. இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த பண்பு. இறைவாக்கினர் எலியா, எலிசாவைப் பின்தொடர வேண்டாம் என்று சொன்னது, தனக்கு நடக்கப்போவதை அறிந்ததனால். ஏனென்றால், அவர் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறார். தன்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிற எலிசாவினால் அதனைத்த தாங்கிக் கொள்ள முடியாது என்று நினைத்திருக்கலாம். எனவே, அவர் தடுத்துப் பார்க்கிறார். ஆனால், எலிசாவின் பிடிவாதத்தைக் கண்டு, அவரைப் பின்தொடர அனுமதிக்கிறார்.
இறைவனிடத்தில் நாம் நம்முடைய தேவைகளுக்காக செபிக்கிறபோது, மற்றவர்களுக்காக மன்றாடுகிறபோது, இப்படிப்பட்ட பிடிவாதம் நமக்கு தேவைப்படுகிறது. எது நடந்தாலும், இறைவன் எனக்கு இதனைத் தராமல் நான் அவரை விட மாட்டேன் என்கிற அந்த பிடிவாதம் நம்முடைய விசுவாச வாழ்விலும் இருக்கட்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்