எருசலேம் போல எழும்பாதே!
லூக்கா 19:41-44
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
கடவுள் தேடி வருவதை மனிதர்கள் கண்டுகொள்வதில்லை. பல நேரங்களில் பலவிதமான அனுபவங்கள், மனிதர்கள் வழியாக கடவுள் நம்மை தேடி வருகிறார். பலவிதமான வேலைகளை செய்யும் நாம் கடவுள் தேடி வருவதை அவ்வளவு ஆர்வமாக கவனிப்பதில்லை. இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளின் குரலைக் கேட்காத எருசலேம் நகரைக் குறித்து நம் ஆண்டவர் இயேசு அழுததை பற்றி சொல்கிறது. ஏன் இயேசு அழுதார்? இயேசு அங்கு போதித்த போதனைகள் அனைத்தும் வெறுமையாய் போனது. ஆண்டவர் தேடி வந்ததை அவர்கள் உணரவில்லை. அமைதிக்கான, அன்பிற்கான வழியில் பயணிக்கவில்லை. ஆகவே இயேசு எருசலேமை நெருங்கி வந்ததும் அழுகிறார். நாம் எருசலேம் போல எழும்ப கூடாது. மாறாக கடவுளோடு நெருங்கி வாழ வேண்டும். அவருக்கு ஆனந்தம் அளிக்க வேண்டும் என்ற ஆசையை நம் மனத்தில் விதைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இரண்டு விதங்களில் நாம் இயேசுவோடு வாழ்ந்து அவருக்கு மகிழ்ச்சியை வழங்கலாம்.
1. அமைதிக்குரிய வழி
நம் வாழ்வில் எது அமைதியைக் கொண்டு வருமோ அந்த காரியங்களை நாம் செய்ய வேண்டும். பிறருக்கு ஊறு விளைவிக்கும் காரியங்களை நாம் தூக்கி தூரே எறிய வேண்டும். வன்முறை விடுத்து அமைதியை விதைக்க வேண்டும். இப்படி செய்வது இயேசுவுக்கு மிகவும் பிடித்த செயலாகும்.
2. ஆசீரளிப்பதற்குரிய வழி
எல்லாரும் நல்லா இருக்கனும் என்று இறைவனிடம் ஜெபிப்பது மட்டுமில்லாமல் அனைவருக்கும் கடவுளி்ன் ஆசீரை அள்ளி வழங்க வேண்டும். நண்பர்கள், பகைவர்கள் என அனைவருக்கும் ஆண்டவரின் ஆசீரை வழங்கி அனைவரையும் இறையாட்சி வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். இப்படி செய்வது இயேசுவுக்கு மிகவும் பிடித்த செயலாகும்.
மனதில் கேட்க…
1. தினமும் கடவுள் தேடி வருவதை நான் உணா்ந்திருக்கிறேனா?
2. பிறரிடம் அமைதியை ஏற்படுத்த நான் மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்னென்ன?
மனதில் பதிக்க…
கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை (லூக் 19:44)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா