எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக
இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் எருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகக் கருதப்படுகிறது. அது தான் கடவுள் வாழும் இல்லமாகவும், இஸ்ரயேல் மக்களின் அடையாளமாகவும் காணப்படுகிறது. எருசலேம் என்று சொல்கிறபோதும், சீயோன் என்று சொல்கிறபோதும், அவை இஸ்ரயேல் மக்களைக்குறிக்கக்கூடிய வார்த்தைகளாகவே நாம் பார்க்க வேண்டும். சீயோன் என்பது மலைத்தொடர். இதன் அருகில் தான் எருசலேம் இருக்கிறது. எனவே, இரண்டு வார்த்தைகளும் ஒரே பொருளைத்தான் குறிப்பதாக இருக்கிறது.
2குறிப்பேடு 6: 6 சொல்கிறது: ”எனது பெயர் விளங்கும் இடமாக எருசலேமைத் தேர்ந்து கொண்டேன் என்று ஆண்டவர் கூறுகிறார்”. எருசலேம் என்பது கடவுளின் இல்லம். அது கடவுளால் ஆளப்படுகிற இடம். கடவுள் தன்னுடைய முழுமையான பிரசன்னத்தையும் வெளிப்படுத்துகிற இடம். அந்த இடம் எதிரிகளால் தாக்கப்படவோ, தகர்க்கப்படவோ முடியாத இடமாகக் கருதப்பட்டது. அது கடவுளால் நிர்வகிக்கப்படும் கோட்டை. எனவே, அங்கு வாழக்கூடிய மக்களால் தான், கடவுளின் வல்ல செயல்களை முழுமையாக அனுபவித்திருக்க முடியும். அவர்களால் தான், கடவுளின் மாபெரும் செயல்களை எடுத்துரைக்க முடியும். கடவுளைப்பற்றி அறிந்து, அனுபவித்திருக்கிற மக்களைப்பார்த்து, இந்த வேண்டுகோளானது விடுக்கப்படுகிறது.
கடவுளின் மாபெரும் செயல்களை நமது வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்திருக்கிற நாமும், அவரது மாட்சிமையை, மேன்மையை, பாதுகாப்பை புகழ்ந்து பாடுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்