எரிபலிகளையும், பாவம் போக்கும் பலிகளையும் நீர் கேட்கவில்லை
இஸ்ரயேல் மக்களின் வாழ்வில், வழிபாடு என்பது அவர்களது வாழ்வோடு இணைந்ததாக இருந்தது. அந்த வழிபாட்டில் எரிபலிகளையும், பாவம் போக்கும் பலிகளையும் அவ்வப்போது, இஸ்ரயேல் மக்கள் நிறைவேற்றினார்கள். எரிபலிகள் என்பது என்ன? பலியாக்கப்படுகிற விலங்குகளை பீடத்தின் மீது, அதனை எரிப்பது தான் எரிபலி. எரிகிற அந்த பலிப்பொருளின் நறுமணம் கடவுளுக்கு நாம் செலுத்தக்கூடிய நன்றியின் அடையாளம் என்று மக்கள் நம்பினார்கள். வானத்திலிருந்து நெருப்பு வந்து பலிப்பொருளை எரித்துவிட்டால், அது கடவுளுக்கு ஏற்கத்தக்க பலிப்பொருள் என்ற நம்பிக்கையும் இஸ்ரயேல் மக்களிடையே இருந்தது. தொடக்கநூலில் நோவா வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்ட பிறகு, கடவுளுக்கு செலுத்துகிற பலி தான், முதல் எரிபலி(தொ.நூல் 8: 20).
பாவம் போக்கும் பலி எனச்சொல்லப்படுவது ஆண்டிற்கு ஒருமுறை, பாவக்கழுவாய் விழா அன்று, தலைமைக்குரு தனது பாவங்களுக்காக ஒரு காளையையும், மக்களின் பாவங்களுக்காக செம்மறிஆட்டையும் பலி செலுத்தி, அதன் இரத்தத்தை மக்கள் மீது தெளிக்க, அவர்களது பாவம் போக்கப்படும் என்று அவர்கள் நம்பினார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்பட்ட ஒரு சடங்கு. இந்த இரண்டையும் வெறும் சடங்காக செய்தால் போதும். கடவுளை மகிழ்ச்சிப்படுத்தி விடலாம், கடவுளிடமிருந்து தேவையானதைப் பெற்றுக்கொள்ளலாம் என்று, இஸ்ரயேல் மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். அவர்களது வாழ்வைப்பற்றி கவலைப்படாதவர்களாக இருந்தனர். வழிபாடு வெறும் சடங்கிற்குள்ளாக முடங்கிப்போவதாக அமைந்திருந்தது. இதனை கடவுள் ஏற்க மாட்டார். இப்படிப்பட்ட சடங்குகளை கடவுள் நம்மிடமிருந்து கேட்கவில்லை என்று ஆசிரியர் சொல்கிறார். அப்படியென்றால் கடவுளுக்கு உகந்த பலி எது?
அவரது திருவுளத்திற்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொள்வதுதான் அவருக்கு உகந்த பலி. நமது வாழ்வில் நாம் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்க முயல்வோம். நமது வாழ்வில் எப்போதும், கடவுளுக்கு எது பிரியமோ, அதனை நிறைவேற்ற முழு உறுதி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்