எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார் தான் நிலைத்து நிற்கமுடியும்?
திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8
”எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார் தான் நிலைத்து நிற்கமுடியும்?”
இந்த திருப்பாடல் ஓர் ஆன்மாவின் திருப்பாடலாக அமைகிறது. இறந்தவர்களின் உடல்களை அவர்களது இல்லத்திலிருந்து குருவானவர் எடுத்து வருவதற்கு முன்னதாகச் சொல்லப்படும் செப வழிபாட்டில் இடம்பெறும் பதிலுரைப்பாடலாகவும் இது அமைந்துள்ளது. வெறும் உலக காரியங்கள் சார்ந்தோ, தனிப்பட்ட, பொதுக்காரியங்கள் சார்ந்தோ அல்ல. உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசும் ஆன்மாவின் பாடல் என்று சொல்லலாம். மனவருத்தத்தை வெளிப்படுத்தும் ஏழு திருப்பாடல்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. தவறான வழியில் சென்றவர்கள் மீண்டும் திருச்சபைக்குள் சேர்க்கப்படுகிறபோது, பாடப்படும் பாடலாகவும் இது அமைந்துள்ளது. தவறான வாழ்க்கை வாழ்ந்து கடவுளை நாடிவருகிறவர்களும், இந்த பாடலை பாடிச் செபிப்பது பொருத்தமானதாக இருக்கும்.
கடவுள் முன்னிலையில் தன்னுடைய உண்மையான நிலையை, தன்னுடைய பலவீனத்தை, தான் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மனிதனின் பாடல் தான் இந்த வரிகள். ஒருவன் எவ்வளவு தான், தன்னை நல்லவனாகக் காட்டிக்கொண்டாலும், கடவுள் முன்னிலையில் வருகிறபோது, தன்னுடைய நிலையை அவன் உணர்ந்து தான் ஆக வேண்டும். தன்னுடைய பலவீனத்தை அவன் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதனை யாரிடமும் மறைக்க முடியாது. குறிப்பாக, கடவுளிடத்தில் அவன் மறைக்கவே முடியாது. அந்த நிலையை உணர்கிறபோது, அவன் புனித பாதையில் நடக்க ஆரம்பிக்கிறான். ஆக, இந்த திருப்பாடலை நாம் முழுமையான ஈடுபாட்டுடன் தியானிக்கிறபோது, நமது வாழ்க்கை கடவுளுக்கு விருப்பமுள்ள ஒரு பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறது.
நமது வாழ்க்கையில் நமது குற்றங்களையும், நாம் செய்யும் தவறுகளையும் எண்ணிப்பார்த்தாலே, கடவுள் நம் மீது காட்டும் அன்பையும், நாம் மற்றவர்கள் மீது காட்டும் தேவையில்லாத வெறுப்பையும் உணர்ந்து கொள்ளக்கூடிய நிலைக்கு மாறி விடுவோம். அது நம்மையும், நமது வாழ்வையும் சரியான பாதைக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்