எப்பொழுதும் விழிப்பாயிருந்து ஜெபம் செய்திடுவோம். லூக்கா 21:36.
கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
இந்த நாளிலும் நாம் நமக்கு ஏற்படும் எல்லா தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஆண்டவரின் பாதத்தில் நம்மை ஒப்புவித்து அவரையே சார்ந்து அவரையே பற்றிக்கொண்டால் அப்பொழுது நமக்கு ஏற்படும் எல்லா தொல்லைகளில் இருந்தும் நம்மை பாதுகாத்து கோழி தன் குஞ்சுகளை காக்கும் வண்ணமாய் நமது ஆண்டவரும் நம்மை பாதுக்காத்து வழிநடத்துவார்.
நாம் இந்த உலக பிரமான காரியத்தில் ஈடுபடும் முன்னே அதற்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம், அதற்காக எவ்வளவோ பிரயாசப்பட்டு ஆயத்தமாகிறோம். ஒரு ஓட்டப்பந்தயத்தில் ஓட வேண்டுமானால் அதற்காக மாதக்கணக்கில் பயிற்சி எடுக்கிறோம். ஒரு பரீட்சைக்கு தயாராக வருஷ கணக்கில் படிக்கிறோம். அதுவே ஆண்டவரின் காரியத்தில் நாம் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்? எவ்வளவு நேரம் வேதம் வாசிக்கிறோம்? எவ்வளவு நேரம் ஜெபம் செய்கிறோம்? ஆராய்ந்து பார்ப்போம். அழிந்து போகும் காரியத்துக்கு அவ்வளவு நேரத்தை ஒதுக்கும் நாம் அழிவில்லாத நித்திய வாழ்வை பெற்றுக்கொள்ள எவ்வளவு நேரம் ஆயத்தமாகிறோம் என்று இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள். அது உங்களுக்கு நன்றாக உணர்த்தும். அதன்படி நடந்து ஆண்டவருக்கு பிரியம் உண்டாக்கி வாழ முயற்சி செய்யுங்கள். இது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லையே!ஆண்டவரிடம் பேசுவது எத்தனை இனிமையானது என்று அவரின் அன்பை ருசித்துப்பார்த்தால் உங்களுக்கு நன்றாக புரியும்.
நாம் உலக பிரமான காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் நமது உள்ளத்தால் ஆண்டவரோடு பேசிக்கொண்டு இருக்கலாம். அவருக்கென்று சிலமணி நேரம் ஒதுக்குங்கள். ஜெபம் செய்யுங்கள், மன்றாடுங்கள். அப்பொழுது நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தை ஆண்டவர் உங்களுக்கு உணர்த்தி நல்வழிப்படுத்துவார். உங்கள் தேவைகள் யாவும் சந்திக்கப்படும். இரட்டிப்பான ஆசீரை பெற்றுக்கொள்வீர்கள். இதை நான் அனுபவித்ததனால் உங்களுக்கு சொல்கிறேன். குப்பையிலும், புழுதியிலும் கிடக்கும் நம்மை உயர்த்தி,ஆண்டவர் அவரின் ஜனத்தின் அதிபதிகளோடும் ராஜாக்களோடும் அமரும்படி அருள் புரிவார். நமக்கு வரும் துன்பங்கள் அநேகமாய் இருந்தாலும் அவைகள் எல்லாவற்றிலும் இருந்து நம்மை விடுவித்து காப்பார்.
இந்த பொல்லாத உலகத்தில் நடக்கும் அநேக சம்பவத்தில் இருந்து தப்பி, இயேசுகிறிஸ்துவின் முன்னிலையில் நிற்க பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு ஜெபம் பண்ணி விழித்திருப்போம். அப்பொழுது இந்த உலக தொல்லையில் இருந்து விடுப்பட்டு அவரோடு கூட ஆட்சி செய்வோம். இந்த உலகத்திலும் நாம் கேட்காத ஆசீர்வாதங்களையும் நமக்கு கட்டளையிடுவார்.
ஜெபம்
அன்பின் பரலோக தெய்வமே! உம்மை துதிக்கிறோம், துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் ஆண்டவர் துதிகளை விரும்பி ஏற்றுக் கொள்ளும் இறைவன் நீர். உமது துதி எக்காலத்திலும் எங்கள்
வாயைவிட்டும், மனதை விட்டும் நீங்காதபடிக்கு காத்துக்கொள்ளும். துன்மார்க்க ஆலோசனையில் நடவாமலும், பாவிகள் வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், உமது வேதத்தில் எப்பொழுதும் பிரியம் வைத்து இரவும், பகலும் உமது வேதத்தில் பிரியமாய் நடந்து விழித்திருந்து ஜெபிக்க அருள் புரியும். எல்லா துதி, கனம், மகிமை யாவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே!! உண்டாகட்டும். ஆமென்!அல்லேலூயா!!!.