எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்.1 தெசலோனிக்கர் 5 : 15
ஒருவரும் மற்றவருக்கு தீமைக்குத் தீமை செய்யாதபடி எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுவோம். ஏனெனில் கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார்.
கர்த்தராகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்.தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும், எல்லோரையும் குணம் ஆக்குபவராகவும் சுற்றித்திரிந்தார் என்று அப்போஸ்தலர் 10:38 ல் வாசிக்கிறோம். கடவுளாகிய இயேசுவுக்கே அந்த பரிசுத்த ஆவியானவர் தேவைஎன்றால் நம் எல்லோருக்கும் எவ்வளவாய் தேவை என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ!
தூய ஆவியை பெற்றுக்கொண்டால் மாத்திரமே நம்மால் நன்மை செய்ய முடியும். ஆவியின் கனிகள் இல்லாவிட்டால் நம்மால் நன்மை செய்ய முடியாது. தீமைக்கு தீமைத்தான் செய்வோம். ஆண்டவரின் அன்பும், மனதுருக்கமும், பொறுமையும், மன்னிக்கிற குணமும் இருந்தால் மட்டுமே நன்மை செய்ய முடியும்.
கெத்சமனே தோட்டத்தில் ஆண்டவர் இயேசு ஜெபம் பண்ணுகையில் அவருடைய வியர்வைத் துளிகள் இரத்தத் துளிகளாக தரையில் விழுந்தது. நம்முடைய பாவங்களையும், நோய்களையும், துன்பங்களையும் அவர் ஏற்றுக்கொண்டு சிலுவையை சுமந்து அடிக்கப்பட்டபோதும் ஒரு தீமையையும் அவர் யாருக்குமே செய்யவில்லை. அந்த சமயத்திலும் எல்லோருக்கும் நன்மையே செய்தார். அவரை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட நாமும் இயேசுவின் மாதிரியை பின்பற்றி தீமைசெய்பவர்களுக்கும் நன்மையே செய்து இயேசுவின் திருநாமத்திற்கே மகிமை சேர்ப்போம்.
அன்பின் தகப்பனே! இறைவா!
உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், ஆராதிக்கிறோம். எங்களுக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராய் எங்கள் கண்களை ஏறெடுக்கிறோம். வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய உம்மிடத்தில் ருந்தே எங்களுக்கு ஒத்தாசை வரும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். எங்களுடைய சுய பெலத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று அறிந்திருக்கிறோம். உம்முடைய பரிசுத்த ஆவியால் நிரப்பி நாங்கழும் உம்மைப்போல் எல்லோருக்கும் நன்மையையே செய்ய உதவி செய்யும்.உம்முடைய சித்தத்தின்படி செய்து உம் ஒருவருக்கே மகிமை சேர்க்க எங்களுக்கு அனுதினமும் போதித்து வழிநடத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல பிதாவே! ஆமென்!அல்லேலூயா!!