என் மக்கள் எனது குரலுக்கு செவிகொடுக்கவில்லை
திருப்பாடல் 81: 11 – 12, 13 – 14, 15 – 16
வேதனையினாலும், வருத்தத்தினாலும் வெளிப்படுகிற வார்த்தைகள் தான், இந்த திருப்பாடலில் வருகிற வார்த்தைகள். இறைவனுடைய பார்வையிலிருந்து இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன. தான் செய்த நன்மைகளையும், அற்புதங்களையும் மறந்து, வேறு தெய்வங்களை மக்கள் நாடிச்சென்று விட்டார்களே? என்கிற வருத்தத்தை இந்த பாடலில் நாம் பார்க்கலாம். இஸ்ரயேல் மக்களின் உள்ளம் எந்த அளவுக்கு கடினமானதாக மாறிவிட்டது என்கிற ஏக்கத்தையும் இந்த பாடல் நமக்கு ஒருங்கிணைத்துக் காட்டுகிறது.
இஸ்ரயேல் மக்களின் நன்றியற்றத்தனம் இங்கே வெளிப்படுத்தப்பட்டாலும், கடவுளின் அன்பில் எந்த குறையும் இல்லை என்பதும், இங்கே நமக்குத்தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் மட்டும், கடவுளின் குரலைக் கேட்டிருந்தால், இவ்வளவுக்கு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்காதே என்று கடவுள் வேதனைப்படுகிறார். நடந்தது நடந்து விட்டது. இவ்வளவு நடந்த நிகழ்வுகளுக்கும் இஸ்ரயேல் மக்கள் தான் காரணம் என்றாலும், கடவுள் அதனை பொருட்படுத்தாமல், அவர்களின் எதிரிகளை அழிக்க முன்வருகிறார். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க அவர் உறுதி கொண்டிருக்கிறார்.
நாம் எவ்வளவுக்கு நன்றிக்கெட்டத்தனமாக நடந்தாலும், இறைவன் எப்போதும், நம்மை அன்பு செய்யக்கூடியவராக இருக்கிறார். நம்மை பாதுகாப்பா வழிநடத்தி, இந்த வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று விரும்புகிறார். அந்த இறைவனின் அன்பில் எப்போதும் நாம் மகிழ்ந்திருப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்