என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்
திருப்பாடல் 90: 2, 3 – 4, 5 – 6, 12 – 13
ஒருவரின் துன்பநேரத்தில் தான், கடவுள் செய்திருக்கிற அளவற்ற நன்மைகள் நமக்கு நினைவுக்குள் வரும். அந்த நிலையைத்தான் தாவீது அரசர் வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் எவ்வளவோ நன்மைகளைச் செய்திருக்கிறார். கடவுளின் பலத்தையும், வல்லமைமிக்க செயல்களையும் முழுமையாக அறிந்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். கடவுளின் வல்லமையை அவர்கள் மட்டும் தான், முழுமையாக வெளிப்படுத்த முடியும். அந்த அளவுக்கு கடவுள் அவர்களுக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். இஸ்ரயேல் மக்களின் நன்றிகெட்டத்தனம் அவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தைக்கொடுத்திருக்கிறது. அந்த தருணத்தில் தான், இந்த திருப்பாடல் எழுதப்படுகிறது.
கடவுள் மீது இஸ்ரயேல் மக்கள் வைக்க வேண்டிய நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. கடவுளை தலைமுறைதோறும் புகலிடமாக இருக்க இந்த பாடல் பணிக்கிறது. நம்பி வந்தவர்களுக்கு ஆதரவு தரக்கூடிய இடம் தான் புகலிடம். இஸ்ரயேல் மக்கள் கடவுளை நம்பிவந்தால், அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தால், கடவுள் அவர்களை தலைமுறைதோறும் காத்திடுவார் என்கிற நம்பிக்கை செய்தியை இதன் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். இதே செய்திதான் நற்செய்தியிலும் வெளிப்படுகிறது. மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்பதற்காக, அவரோடு தங்கிவிடுகிறார்கள். மூன்றுநாட்களாக அவரது போதனையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது மக்கள் இயேசுவின் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அந்த நம்பிக்கை பொய்த்துப்போகவில்லை என்பதும் இங்கே தெளிவாகிறது.
நாமும் கடவுளை நம்பிவந்தால், நிச்சயம் கடவுளின் அன்பையும் அருளையும் நிறைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த நம்பிக்கை தான், நமக்கு துன்பமான நேரத்தில் உறுதுணையாக இருந்து, பலம் தருவதாக அமையும். அதனை நாம் நிறைவாக வாழ்வதற்கு, நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு கடவுளின் அருள்வேண்டி, மன்றாடுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்