என் தலையில் நறுமணத்தைலம் பூசுகின்றீர்
திருப்பாடல் 23: 1 – 3a, 3b – 4, 5, 6
நறுமணத்தைலம் என்பது அபிஷேகத்தைக் குறிக்கிற வார்த்தையாக இருக்கிறது. இறைவன் நம் ஒவ்வொருவரையும் அபிஷேகம் செய்திருக்கிறார். அதாவது நம் ஒவ்வொருவரையும் அவர் நினைவிற்கொண்டிருக்கிறார், அன்பு செய்கிறார், மிகுந்த பாசம் உடையவராய் இருக்கிறார் என்பதனை இதன் விளக்கமாக நாம் பார்க்கலாம். பழைய ஏற்பாட்டில் நறுமணத்தைலம் என்பது ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரைக் குறிப்பதாக இருக்கிறது. இந்த திருப்பாடலை தனிப்பட்ட முறையில் நாம் வாசித்து பார்க்கிறபோது, நம் அனைவருக்குமான திருப்பொழிவு பாடலாக இருக்கிறது.
நறுமணத்தைலம் ஒருவர் மீது பூசப்படுகிறபோது, அவர் இறைவனுக்கு பணியாற்றக்கூடியவராக மாற்றம் பெறுகிறார். அதாவது தனது நலனை விடுத்து, இனி கடவுளின் விருப்பமே, தன் விருப்பம் என்ற குறிக்கோளுடன் வாழ ஆரம்பிக்கிறார். இறைவனின் மந்தையை, அவரது ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இது ஒரு மனிதனுக்கான கடமையை, பொறுப்பை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இந்த சமூகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் கடவுளின் கருவியாக விளங்க, இது நமக்கு நினைவூட்டலாக அமைகிறது. கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பை வழங்கியிருக்கிறார். அந்த பொறுப்பை நாம் கடமை உணர்வோடு செய்து முடிக்க வேண்டும்.
நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்கிற எண்ணமே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்தர வேண்டும். அந்த அனுபவத்தைத் தருவது தான் திருப்பாடல் ஆசிரியரின் நோக்கம். அந்த மகிழ்ச்சியில் திளைத்துவிடாமல், தேங்கி விடாமல், கடவுள் நமக்கு வழங்கியிருக்கிற பொறுப்பை நிறைவோடு செய்ய மன்றாடுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜ