என் கை எப்போதும் அவனோடு இருக்கும்
”கை” என்பது ஒருவரின் துணையைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. நம்முடைய நண்பர்கள், நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவர்கள், நமது துணையாளர்களாக இருக்கிறார்கள். இங்கே கடவுள் தன்னுடைய ஊழியருக்கு எப்போதும் துணையாக இருப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். கடவுள் தன்னுடைய பணிக்காக பல மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்களில் சிலர் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். பலர், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை? என்று ஒதுங்கிச் செல்கிறார்கள்.
அவர்கள் ஒதுங்கிச் செல்வதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. கடவுளின் பணியைச் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.அந்த பணியைச் செய்கிறபோது, பலவிதமான சோதனைகள், இன்னல்கள், இடையூறுகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே தான், பலர் அதனை விரும்புவதில்லை. கடவுளின் பணி என்று சொல்கிறபோது, குருக்களும், துறவறத்தாரும் மட்டுமல்ல, பொதுநிலையினரும் இந்த பணியைச் செய்ய கடவுளின் அழைப்பைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் பணிவாழ்வில், கடவுளின் கரம், அதாவது அவரது துணை எப்போதும் இருக்கும் என்பதுதான், இந்த திருப்பாடல்(திருப்பாடல் 89: 1 – 2, 20 – 21, 24 & 26) வழங்கும் நம்பிக்கைச் செய்தி. கடவுள் அவருடைய பணிக்காக அழைத்துவிட்டு, அவர்களை விட்டுவிட்டுச் சென்று விடுவதில்லை. அவர்களைப் பாதுகாக்கிறார். பேணிப்பராமரிக்கிறார்.
நமது வாழ்வில் கடவுள் நம்மை கடவுளின் பணிக்காக அழைத்திருந்தால், நாம் மகிழ்ச்சி அடைவோம். அவருடைய பணியைச் செய்வதில் பெருமிதம் கொள்வோம். அவருடைய இரக்கமும், அன்பும் நம்மைத் தொடர வேண்டுமென்று, இந்த திருப்பாடலை (திருப்பாடல் 89: 1 – 2, 20 – 21, 24 & 26) தியானிப்போம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்