என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற வருகின்றேன்!
தியானப்பாடல் சிந்தனை : திருப்பாடல் 40: 6 – 7, 7 – 8, 9, 16
கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்ற வருகிறேன் என்று திருப்பாடல் ஆசிரியர் எழுதுகிறார். கடவுளுடைய திருவுளம் என்ன? நாம் அவருக்கு பலி செலுத்த வேண்டும் என்பதா? அவருக்கு மகிமையையும், புகழ்ச்சியையும் செலுத்த வேண்டும் என்பதா? எது கடவுளுடைய திருவுளம்? கடவுள் ஒருநாளும் பலியை விரும்பியது கிடையாது. இரக்கத்தையே அவர் விரும்புகிறார். தனக்கு ஆபரணங்கள் வேண்டும். தங்க வைடூரியங்கள் வேண்டும், அதிகமான இறைச்சி வேண்டும் என்று கடவுள் விரும்புவது கிடையாது. தங்க நகைகள் கடவுளின் வெறும் படைப்பு. அதற்கு மனிதர்களாகிய நாம் தான், மதிப்பு கொடுக்கிறோம். விலைமதிப்பில்லாததைப் போல அவற்றை, நாம் வைத்திருக்கிறோம். ஆனால், கடவுளுக்கு அவை மதிப்பில்லாதது. ஆக, கடவுள் எதிர்பார்ப்பது இதுபோன்ற மதிப்பில்லாத பொருட்களை அல்ல. கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஏழைகளுக்கு இரங்க வேண்டும் என்பதைத்தான். அவர்களுக்கு நாம் இரக்க காட்ட வேண்டும் என்பதைத்தான்.
நறுமணப்பலிகளை விட, எரிபலிகளை விட, பாவம் போக்கும் பலிகளை விட, ஆயிரமாயிரம் மடங்கு கடவுளுக்கு பிரியமானது, நாம் ஏழைகளுக்கு காட்டக்கூடிய இரக்கம் இன்றைய நற்செய்தியில் இயேசு அதைத்தான் செய்கிறார். பெருந்திரளான மக்கள் இயேசுவைத் தேடிவருகிறார்கள். அவர்கள் அனைவருமே வாழ்க்கையில் நொந்துபோனவர்கள். அவர்கள் அனைவரையும் இயேசு அரவணைத்துப் பாதுகாக்கிறார். அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்கிறார்.
இன்றைய வாழ்க்கைச்சூழலில், உதாரணமாக, சேவை வரி என்று அரசுக்கு நாம் ஒரு பொருளை வாங்குகிறபோது, வாடகைக்கு இடங்களைப் பயன்படுத்துகிறபோதோ செலுத்துகிறோம். அதேபோல நமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஆடம்பர பொருட்களை வாங்குகிறபோது, நமக்கு நாமே ஏன் ஏழைகளுக்கு சேவை வரியைச் செலுத்தக்கூடாது? ஒரு கார் வாங்குகிறோம். ஐந்து இலட்சம் மதிப்புள்ள காரை வாங்குகிறபோது, ஐம்பதாயிரம் ரூபாயை நாம் ஏன் இரக்கச் செயல்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது? அது நிச்சயமாக கடவுளுடைய திருவுளம் நிறைவேற்றும் காரியம் தானே?
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்