என் கடன் பணி செய்து கிடப்பதே
லூக்கா 17:7-10
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
இந்த உலகில் படைக்கப்பட்ட நாம் பல்வேறு விதமான பணிகளைச் செய்ய வேண்டும். பலருக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம். கடவுள் நம்மை படைத்து பாசத்தோடு பராமரித்து வருவதற்கு அவருக்கு பல விதமான பணிகளைச் செய்ய வேண்டும். நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல நல்ல உள்ளங்கள் நம் வாழ்வில் ஏணிகளாக இருந்திருகிறார்கள். இப்போதும் நமக்கு உறுதுணையாக இருந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நாம் கடன்பட்டிருக்கின்றோம். பல விதமான பணிகளைச் அவர்களுக்காக கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் நம் பிறப்பு முழுமையடைகிறது. பிறருக்கு நாம் பணிகள் செய்யும்போது இரண்டு சிந்தனைகளை நம் சிந்தைனையில் நிறுத்துவது சிறப்பு.
1. கடன்
என்னுடன் பயணிக்கும் அனைவரும் ஏதாவது ஒருவிதத்தில் எனக்கு உதவி செய்தவர்கள் அல்லது செய்யப்போகிறவா்கள். ஆகவே நான் செய்யும் உதவி அந்த கடனை அடைப்பது. மேலும் இந்த உலகில் நான் ஒரு பணியாளன்தான். பிறருக்கு என் அருகிலிருக்கும் அனைவருக்கும் உதவி செய்யும் பணியாள். இதை கருத்தில் கொண்டு நாம் பணிசெய்யும் போது நம் வாழ்க்கையில் செல்வாக்கு வந்து சேரும்.
2. கடமை
இன்றைய நற்செய்தி வாசகம் நாங்கள் பயனற்ற பணியாளர்கள், எங்கள் கடமையைத்தான் செய்தோம் என்கிறது. பிறருக்கு உதவி செய்வது என்பது நம் கடமை. உதவி செய்யும்போது கைம்மாறு எதிர்பார்ப்போர் உதவி செய்வதில் பலனில்லை. ஆகவே நம் மனநிலையை மாற்றுவோம். என் முக்கியமான கடமை பிறருக்கு விளம்பரம் செய்யாமல், தம்பட்டம் அடிக்காமல் உதவுவது.
மனதில் கேட்க…
1. நான் பிறருக்கு உதவி செய்யும்போது நான் பட்ட கடனை அடைக்கிறேன்- இது தெரியுமா?
2. உதவி செய்யும்போது விளம்பரம் இல்லாமல் பலன் எதிர்பாராமல் உதவி செய்ய கற்றுக்கொண்டேனா?
மனதில் பதிக்க…
நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவறை்றையும் செய்தபின், நாங்கள் பயனற்ற பணியாளர்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம் எனச் சொல்லுங்கள் (லூக் 17:10).
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா