என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 6 – 7
எல்லா திருப்பாடல்களிலும் இறைவனைப் போற்றுவதும், இறைவனுக்கு நன்றி செலுத்துவதும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? இறைவனுக்கு நாம் ஒவ்வொருநாளும் நன்றி சொல்ல வேண்டுமா? இறைவனுக்கு நமது உள்ளம் தெரியாதா? இறைவனை எதற்காக நாம் போற்றிக்கொண்டே இருக்க வேண்டும்? இந்த கேள்விகள் பல நாட்கள் எனக்குள்ளாக எழுந்திருக்கின்றன. சற்று ஆழமாகச் சிந்தித்தபோது, எதற்காக திருப்பாடல் ஆசிரியர் இதனை திரும்ப திரும்ப வலியுறுத்திக் கூறுகிறார் என்பதை உணர முடிந்தது.
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்ற அந்த நிகழ்வுகளை, பாஸ்கா விழா எடுத்துக் கொண்டாடி, அந்த நாளில் குடும்பத் தலைவர் தன்னுடைய பிள்ளைகளுக்கு, கடவுள் கொடுத்த அந்த விடுதலையின் நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் சொல்ல வேண்டும் என்று கடவுள் கட்டளை கொடுத்தார். அதற்கான காரணம், கடவுள் செய்த நன்மைகளை நாம் மீண்டும், மீண்டும் கேட்கிறபோது, அது நமது வாழ்வாகவே இருக்கிறது. அந்த நிகழ்வுகள் நம்மை விட்டு எப்போதும் நீங்கிச் செல்லாது. அது நமது வாழ்வின் அங்கமாக மாறிவிடுகிறது. அதேபோல, கடவுளைப் போற்றுவதும், புகழ்வதும், நன்றி செலுத்துவதும் ஒவ்வொருநாளும் நாம் சொல்லிக்கொண்டிருக்கிறபோது, நம்முடைய வாழ்வாக அது மாற்றம் பெறுகிறது. அதனை மறக்காதவர்களாக நாம் இருக்கிறோம். அந்த நன்றியின் தன்மைகளோடு நமது வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நன்றி உணர்வோடு வாழவும், இறைவனின் புகழ்ச்சியிலே தொடர்ந்து நிலைத்திருக்கவும் தான், ஒவ்வொருநாளும் போற்றுவதற்கு அழைக்கப்படுகிறோம்.
இறைவனைப் போற்றுவது நமக்கு மகிழ்ச்சியின் அனுபவமாக இருக்க வேண்டும். இறைவனோடு நான் இணைந்திருக்கிறேன் என்கிற உணர்வைத்தர வேண்டும். அந்த உணர்வு இறைவனுக்கு நன்றிக்குரியவர்களாக இருப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்காக நாம் நாளும் செபிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்