என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்
திருப்பாடல் 22: 7 – 8, 16 – 17a, 18 – 19, 22 – 23
”உன்னை எப்படியெல்லாம் நம்பியிருந்தேன். இப்படி என்னை கைவிட்டு விட்டாயே?” என்று நம்முடைய நெருங்கிய நண்பர்கள் நமக்கு ஏதாவது தீங்கு செய்கிறபோதோ, உதவி கேட்டு மறுக்கிறபோதோ, நாம் சொல்வதுண்டு. அது நாம் அந்த நண்பரிடத்தில் வைத்திருக்கிற தீராத நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த நம்பிக்கை சிதைக்கப்படுகிறபோது, மனம் நொறுங்குண்டு இந்த வார்த்தைகளை உதிர்க்கிறோம். அப்படிப்பட்ட தொனியில் தான், திருப்பாடல் ஆசிரியரின் வரிகள் அமைந்திருக்கின்றன. இந்த வரிகள் தான், இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் சிலுவையிலிருந்து உதிர்த்த கடைசி ஏழு வார்த்தைகளுள் ஒன்றாக இருக்கிறது.
எதற்காக திருப்பாடல் ஆசிரியர் இந்த வரிகளைச் சொல்கிறார்? அவர் யாரால் கைவிடப்பட்டார்? எப்படி கைவிடப்பட்டார்? கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட ஒருவரின் பாடல் தான், இந்த திருப்பாடல் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிற நேரத்தில், ஒரு சில துன்பங்களை அவர் சந்திக்க நேரிடுகிறது. அந்த துன்ப நேரத்தில், மற்றவர்கள் நம்பிக்கையாளரைப் பரிகசிக்கிறார்கள். அவரை வார்த்தைகளால் வதைக்கிறார்கள். கடவுள், கடவுள் என்று சொன்னானே? இப்போது அந்த கடவுள் எங்கே? என்று இறுமாப்பு செய்கிறார்கள். அந்த துன்ப நேரத்தில் கடவுள் நம்பிக்கை கொண்டவரை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்கள். அந்த வேதனையில் எழுப்பப்படக்கூடிய வரிகள் தான் இவை.
கடவுள் எப்போதும் நம்மைக் கைவிடமாட்டார். எந்நாளும் அவர் நம்மோடு இருக்கிறார். நம் துன்பத்தில் பங்கெடுக்கக்கூடியவராக இருக்கிறார். நாம் கடவுளின் அன்பை முழுமையாக உணர்கிறவர்களாக நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்