என்றென்றும் நீர் புகழப் பெறவும் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்
தானியேல்(இ) 1: 29அ,இ, 30 – 31, 32 – 33
சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ கடவுளைத் தவிர வேறு எவரையும் வழிபட மாட்டோம் என்று சொன்னதால், நெபுகத்நேசர் அரசரால் தீச்சூளையில் தள்ளப்பட்டனர். மன்னனின் பணியாளர் அவர்களைச் சூளைக்குள் தூக்கி எறிந்தபின், சூடநீர், கீல், சணற்கூளம், சுள்ளிகள் ஆகியவற்றைச்சூளையில் போட்டு தீ வளர்த்த வண்ணம் இருந்தனர். இதனால், தீப்பிழம்பு சூளைக்கு மேல் நாற்பத்தொன்பது முழம் எழும்பிற்று. அது வெளியே பரவிச்சென்று, சூளை அருகே நின்று கொண்டிருந்த பாபிலோனியரைச் சுட்டு எறித்தது. ஆனால், இளைஞர்கள் காவல்தூதர்களின் பராமரிப்பில் பாதுகாப்பாக இருந்தனர். இக்கட்டான நேரத்தில் தங்களைக் காப்பாற்ற தூதர்களை அனுப்பிய இறைவனை அவர்கள் இணைந்து போற்றுவதுதான் இன்றைய பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டிருக்கிறது.
இறைவனை மூதாதையரின் கடவுளாக இளைஞர்கள் வாழ்த்துகிறார்கள். இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் செய்து வந்திருக்கிற எல்லா வல்ல செயல்களையும் இஸ்ரயேலின் பிள்ளைகள் அனைவருக்கும் அவர்களுடைய மூதாதையர் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்கள் கடவுளையும், அவர்கள் பெற்ற கடவுள் அனுபவத்தையும் இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்க எடுத்த முயற்சிகள், இளைஞர்களின் வார்த்தைகளில் தெளிவாக நமக்கு புலப்படுகிறது. கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு, அந்த இளைஞர்கள் பரிசைப் பெற்றுக்கொண்டார்கள்.
நம்முடைய வாழ்விலும் ஆண்டவர் மீது நாம் முழுமையாக நம்பிக்கை வைத்து மன்றாடுகிறபோது, அவர் நம்மைக் காப்பாற்றுவார். நம்மோடு உடன் நடப்பார். தன்னுடைய காவல்தூதர்களைக் கொண்டு நமக்கு வரக்கூடிய இடர்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவார்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்