என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு
அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் வாழ்த்துக்கள்
திருப்பாடல் 118: 1 – 2, 16 – 17, 22 – 23 (24)
கடவுளது பேரன்பு என்றென்றும் உள்ளது என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். ”என்றென்றும்” என்பதின் பொருள் என்ன? “எல்லாக்காலத்திலும்” என்று நாம் பொருள் கொடுக்கலாம். அதாவது, வறுமையோ, துன்பமோ, வாழ்வோ, தாழ்வோ எல்லா நேரத்திலும் ஆண்டவரின் அன்பு, நம்மிடத்தில் உள்ளது. குறிப்பாக, நாம் தவறு செய்தாலும், ஆண்டவர் நம்மை முழுமையாக அன்பு செய்கிறார். நாம் செய்த தவறை நினைத்து, வருந்துவாரே அன்றி, நம்மை மீட்பதற்கு முயற்சிகள் எடுப்பாரேயன்றி, அவர் நம்மை தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறவர் கிடையாது. அதுதான் கடவுளின் பேரன்பு என்று, திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
கடவுளின் அன்பிற்கு ஈடு இணையே இல்லை. எனவே தான், அவருக்கு நன்றி செலுத்துங்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். நாம் செய்த தவறுகளுக்கு ஏற்ப, கடவுள் நமக்கு தண்டனை கொடுப்பவர் என்றால், நாம் அவர் முன் நிற்பதற்குக் கூட தகுதியற்றவர்களாக இருக்கிறோம். கடவுள் நம் பாவங்களைப் பார்த்து, நம்மை தீர்ப்பிட்டிருந்தால், நிச்சயம் தன்னுடைய ஒரே மகனை நமக்காக இந்த உலகத்திற்கு அனுப்பியிருக்க மாட்டார். இயேசுவின் உயிர்ப்புப்பெருவிழா, கடவுள் இந்த உலகத்தின் மீது வைத்திருக்கிற முழுமையான அன்பை நமக்கு எடுத்துரைப்பதாக இருக்கிறது. இந்த உலகம் கடவுளின் அன்பிற்கு தகுதியில்லாத நிலையில் இருந்தாலும், கடவுள் அந்த தகுதியைக் கொடுத்து, இந்த உலகத்தை மீட்டிருக்கிறார்.
நமது வாழ்வில், கடவுள் நம்மீது காட்டி வருகிற அன்பிற்கே, நாம் எப்போதும் நன்றியுணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும். நம் அனைவர் மீதும் அவர் காட்டி வருகிற அளவற்ற இரக்கத்திற்கே நாம் முழுமையாக அவருக்கு ஊழியம் செய்கிறவர்களாக மாற வேண்டும். ஆண்டவர் மீது உண்மையான அன்பு கொண்டிருப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்