என்றும் உள்ளது ஆண்டவரது பேரன்பு
திருப்பாடல் 136: 1 – 3, 16 – 18, 21 – 22&24
நன்றி என்கிற மூன்றெழுத்து வார்த்தை, நம்முடைய மூச்சோடு கலந்துவிட்ட வார்த்தை. நமக்கு நன்மை செய்கிறவர்களை உள்ளன்போடு நினைத்துப்பார்ப்பது நம்முடைய கடமை. ஒருவர் நன்மை செய்கிறபோது அல்லது நமக்கு உதவி செய்கிறபோது, நன்றி என்ற வார்த்தையை உதிர்க்கிறோம். நன்றி என்ற வார்த்தை பொதுவாக உச்சரிக்கப்பட்டாலும், அது உதட்டளவில் உச்சரிக்கப்படுகிற வார்த்தையாகவும், உள்ளத்தளவில் உச்சரிக்கப்படுகிற வார்த்தையாகவும் உணரப்படுகிறது. நன்றி என்ற வார்த்தை எப்போது உச்சரிக்கப்பட்டாலும் அது உணர்வுப்பூர்வமாகவும், உதட்டளவிலும் அமைந்துவிடாமல், உள்ளத்திலிருந்து எழுவதாக அமைய வேண்டும். அதுதான் இன்றைய திருப்பாடல் நமக்கு தருகிற செய்தி.
நன்றி என்பது மூன்றாவது நபருக்கு வார்த்தையால் சொல்லிவிடுகிறோம். நம்மைப் பெற்றெடுத்து, நம்மை பேணிவளர்த்த நம்முடைய அன்புப்பெற்றோருக்கு நாம் எப்போதும் நன்றி என்று சொல்வதில்லை. அப்படிச்சொல்லப்படுகிற வார்த்தையை எவரும் விரும்புவதும் இல்லை. காரணம், அது நம்முடைய நெருங்கிய உறவுகளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்திவிடுகிறது. அப்படியென்றால், நம்முடைய பெற்றோர்களுக்கு, நம்முடைய நெருங்கிய உறவுகளுக்கு நன்றி சொல்லக்கூடாதா? சொல்ல வேண்டும். எப்படி? நம்முடய வாழ்வு மூலமாக நம்முடைய நன்றியை வெளிப்படுத்த வேண்டும். அவர்களை வயதான பருவத்தில் தாங்குவது, நெருக்கடியான நேரங்களில் உறவினர்களுக்கு உதவுவதன் வழியாக, நம்முடைய நன்றியை நாம் வெளிப்படுத்த முடியும். அதேபோல, ஏழை,எளியவர்களுக்கு உதவி செய்வதன் வாயிலாக, கடவுளுக்கு நாம் நன்றியை வெளிப்படுத்த முடியும்.
நன்றியை வெளிப்படுத்தும் நேரங்களில், தருணங்களில் நன்றியுணர்வை வெளிப்படுத்துவதுதான், நம்மை தெய்வீக நிலைக்கு இட்டுச்செல்லும். அந்த நன்றியை மறக்கிற மனிதர்கள் தான், இன்றைக்கு அதிகமான பேர் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் வேறுபட்டு, நன்றியுள்ளவர்களாக வாழ்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்