”என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்” (லூக்கா 10:23)
கடவுளின் ஆட்சியை அறிவித்த இயேசு நாம் அந்த ஆட்சியில் நுழையவிடாமல் தடுக்கின்ற சக்திகளைப் பற்றியும் நம்மை எச்சரிக்கிறார். கடவுளின் சக்தியை எதிர்க்கின்ற சக்திகள் தோல்வியுறுவது உறுதி. ஆனால், நன்மைக்கும் தீமைக்கும் இடையே ஒரு நெடிய போராட்டம் நிகழ்கிறது என்பதை நாம் மறுக்கவியலாது. ஆகவேதான், இயேசுவின் பணியைத் தொடர்ந்து செய்ய நாம் முன்வராவிட்டால் படிப்படியாக நாம் அவருடைய எதிரிகளாக மாறிவிடுகின்ற ஆபத்து உண்டு. இதையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். நம்மைவிட்டு வெளியேறிய தீய ஆவி மீண்டும் நம்மைத் தேடி வந்துவிட்டால் அதை எதிர்த்துப் போராட நமக்கு இன்னும் அதிக சக்தி தேவைப்டக்கூடும். எனவே, இயேசுவோடு நாம் எப்போதும் இணைந்திருந்து செயல்படவும் தீய ஆவிக்கு நம் உள்ளத்தில் இடம் கொடாமலிருக்கவும் அழைக்கப்படுகிறோம்.
நற்செய்தி நூலில் ”நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்ற சொற்றொடரும் இயேசு வழங்கிய போதனையாக வருகிறது (லூக் 9:50). இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், வெளிப்படையாக இயேசுவின் சீடராகத் தம்மை அடையாளம் காட்டாதவர்களும் மறைமுகமாக இயேசுவைச் சார்ந்திருக்கலாம் என்பதே உண்மை. எனவே, யார்யார் கடவுளின் வழிகளைப் பின்பற்றுகின்றனர் என்பது குறித்துத் தீர்ப்பு வழங்குவதில் நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். என்றாலும் இயேசுவைப் பின்செல்ல முடிவெடுத்த பிறகு அவரோடு என்றும் இணைந்திருக்க நாம் இடையறாது முயல வேண்டும். அவ்வாறு ஒரு தொடர்முயற்சியை நாம் மேற்கொள்ளாவிட்டால் நாம் அவருடைய ஆட்சியிலிருந்து பிரிந்துபோய்விடக் கூடும். எனவேதான் இயேசுவை நாம் எந்நாளும் சார்ந்து இருக்கவேண்டும். அப்போது இயேசுவின் பணியைத் தொடர நாம் மகிழ்ச்சியோடு முன்வருவோம். அனைத்து மக்களோடும் இணைந்து செய்யப்பட வேண்டிய இப்பணி முறையாக நிகழுமென்றால், கடவுளின் ஆட்சியில் பங்கேற்க நாம் தயங்கமாட்டோம்; பிறரையும் இறையாட்சிக்குள் கொண்டுவர நாம் துணிந்து செயல்படுவோம்.
மன்றாட்டு
இறைவா, வாழ்க்கைப் போராட்டத்தில் நாங்கள் உம்மோடு சேர்ந்து நின்று செயல்பட எங்களுக்கு அருள்தாரும்.
~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்