என்னைக் காண்பவர் …
“என்னைக் காண்பவர் என்னை அனுப்பியவரையே காண்கிறார். என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டுமல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்” என்னும் ஆண்டவர் இயேசுவின் அமுத மொழிகளை இன்று தியானிப்போம்.
தந்தை இறைவனை யாருமே கண்டதில்லை. ஆனால், இயேசு அந்த இறைவனின் முகமாக இருக்கின்றார். அவரைக் கண்டவர்கள் இறைவனைக் கண்டதற்கு இணையாகின்றார்கள் என நம்பிக்கையுடன் சொல்கின்றார். அந்த அளவுக்கு இயேசுவின் செயல்களும், எண்ணங்களும் அமைந்திருந்தன.
நாம் இப்படிச் சொல்ல முடியுமா? என்னைக் காண்பவர்கள் ஆண்டவர் இயேசுவையே காண்கின்றனர் என்னும் வகையில் என்னால் வாழ முடியுமா, பணியாற்ற முடியுமா? இதுவே இன்றைய நற்செய்தி வாசகம் விடுக்கும் அறைகூவல்.
அன்னை தெரசாவைக் கண்டவர்கள் ஆண்டவர் இயேசுவை அவரில் கண்டனர். புனிதர்கள், மறைசாட்சிகளைக் காண்பவர்கள் ஆண்டவரின் திருமுகத்தைக் காண்கின்றனர். இதுவே நற்செய்தி அறிவிப்பு, இதுவே சாட்சிய வாழ்வு.
நமது வாழ்வும் அவ்வாறு அமைய முயற்சி எடுப்போம்.
மன்றாடுவோம்: தந்தையின் திருவுளப்படி வாழ்ந்த இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எனது வாழ்வும், பணிகளும் உம்மைப் பிறருக்கு எடுத்துரைக்கும் வண்ணம் அமைய அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ அருள்பணி. குமார்ராஜா