”எனக்கு அடுத்திருப்பவர் யார்?” (லூக்கா 10:29)
திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட்ட இக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதத்தில் இயேசு கூறிய கதை ”நல்ல சமாரியர்” என்னும் சிறப்பான உவமை ஆகும். லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற இந்த உவமை தரும் செய்தி என்ன? ”எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்னும் கேள்விக்குப் பதில் கேள்வியாக, ”உமக்கு அடுத்திருப்பவராக இல்லாத ஒருவரைக் காட்ட முடியுமா?” என்றுகூட இயேசு சவால் விட்டிருக்கலாம். ஆனால் இயேசு ஓர் உவமை வழியாக அந்த உண்மையைக் கற்பித்தார். சமாரிய இனத்தவர் தாழ்த்தப்பட்டோர்; அவர்களுக்கு யூதர்கள் நடுவே மதிப்பு இருக்கவில்லை. ஆனால் கள்வர் கையில் அகப்பட்டு, அடிபட்டுக் குற்றுயிராக விடப்பட்ட மனிதருக்கு உதவிசெய்தது அந்த சாதாரண சமாரியர்தானே தவிர யூத குருவோ, லேவியரோ அல்ல. யார்யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். இந்த உண்மையை வாழ்க்கையில் காட்டியவர் நல்ல சமாரியர்.
இன்று இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றார்கள்; மனித மாண்பு மறுக்கப்பட்டு, உரிமைகள் மீறப்பட்டு, இழிவாக நடத்தப்படுகிறார்கள். இவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். அப்படியென்றால், இயேசு அறிவித்த அன்புக் கட்டளையின் பொருள் என்ன? ”உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வாயாக” (லூக் 10:27; இச 6:5) என்னும் கட்டளையைக் கடைப்பிடிக்க அனைவருக்கும் கடமை உண்டு. யாருக்கு அன்புகாட்டுவது என்றொரு கேள்வி எழுப்புவதே முறையல்ல, ஏனென்றால் அன்பின் அரவணைப்பிலிருந்து விலகிநிற்போர் அல்லது விலக்கப்பட்டோர் ஒருவர்கூட இவ்வுலகில் இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது. எங்கு மனிதர் உள்ளனரோ அங்கு அன்புக் கட்டளை செயல்படுத்தப்பட வேண்டும். அக்கட்டளைக்கு விதிவிலக்கு கிடையாது. எனினும், சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டோர் நமது தனி அன்புக்கு உரித்தானவர் என்பது இயேசு நமக்கு அளிக்கின்ற போதனை. தன்னலம் கோலோச்சுகின்ற நம் சமுதாயத்தில் இது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.
மன்றாட்டு
இறைவா, நீர் எங்களுக்குக் காட்டிய அன்பை நாங்கள் எல்லா மனிதரோடும் பகிர்ந்திட அருள்தாரும்.
~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்