எதையும் குறைக்காதே! மிகுதியாக்கு…
லூக்கா 12:39-48
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
மனிதா்களாகிய நமக்கு கடவுள் எல்லாவற்றையும் கொடுக்கும்போது கணக்குப் பார்க்கவில்லை. அள்ளி அள்ளி மிகுதியாக தந்தார். அவரிடமிருந்து அறிவு, ஆற்றல், திறமை, பணம், செல்வம் அனைத்தையும் மிகுதியாகப் பெற்ற நாம் பிறருக்கு வழங்கும்போது குறைப்பது ஏன்? மிகுதியாக்குங்கள் என்ற மிக முக்கியமான அறிவிப்போடு இன்று வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் நம்மை மிகுதியாக்க வேண்டும். நாம் கஞ்சத்தனமாக செயல்படாமல் கொடுப்பதில், நம்மை செலவழிப்பதில் செல்வந்தர்களாக செயல்பட வேண்டும். அதற்காக இரண்டு சிந்தனைகளை நம் மனதில் நிறுத்துவது சாலச் சிறந்தது.
1. எதுவும் வராது
நாம் பிறரோடு நம்முடன் இருப்பவைகளை பகிராமல் இருக்கும் போது ஒரு கருத்தை மிகவும் ஆழமாக அனுதினமும் தியானிக்க வேண்டும். நாம் சேமித்து வைக்கின்ற பொன், பொருள், செல்வம் இவையனைத்தும் நம்முடன் வரவே வராது. நாம் வெறுமையாகத் தான் செல்ல வேண்டும். பின் ஏன் பகிராமல் நான் சேமிக்கிறேன்? குறைக்காமல் மிகுதியாக கொடுக்கலாம் அல்லவா?
2. எதுவும் தராது
நாம் நம்முடன் மிகுதியாக சேமித்து வைக்கின்ற எதுவும் மகிழ்ச்சியைத் தர முடியாது. மனநிறைவை ஒருபோதும் வழங்க முடியாது. அப்படியிருக்க ஏன் இந்த பேராசை? உள்ளதை உவகையோடு பிறருக்கு வழங்குங்கள். உள்ளதை குறைக்காமல் மிகுதியாக கொடுங்கள்.
மனதில் கேட்க…
1. மிகுதியாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?
2. எதுவும் என்னுடன் வராது என்பது எனக்கு தெளிவாகத் தெரியுமா?
மனதில் பதிக்க…
மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்(லூக் 12:48)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா