எது உண்மை ஞானம் ?
சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் வழி வந்த கிரேக்கர்கள் ஞானத்துக்கும், அறிவாற்றலுக்கும் பெரிதும் முக்கியத்துவம் அளித்தார்கள். பெரிய சிந்தனையாளர்கள், ஞானிகள் அவர்கள் மத்தியிலே வாழ்ந்தனர். ஆனால், “இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது” என்கிறார் பவுல். எனவே, எது உண்மை ஞானம் ? என்னும் கேள்வியை எழுப்பி, விடையும் தருகிறார். “யாரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்” என்கிறார். இவ்வுலக படிப்போ, பட்டங்களோ, செல்வமோ நிறை வாழ்வை, இறையன்பைத் தர முடியாது. கிறிஸ்து மட்டுமே நமது ஞானம், நமது செல்வம், நமது பெருமை. அவரது கீழ்ப்படிதல் அனைவருக்கும் பாடம். எனவே, மனிதரைக் குறித்து, நமது சாதனைகளைக் குறித்து நாம் யாரும் பெருமை பாராட்ட வேண்டாம். இயேசுவைக் குறித்து, அவரது தியாகத்தைக் குறித்து பெருமை கொள்வோம். அதுவே உண்மையான ஞானம்.
மன்றாடுவோம்: ஞானத்தின் ஊற்றான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட எதுவும் எங்களுக்குச் சொந்தமல்ல. அனைத்தும் உமக்கே சொந்தம் என்னும் உண்மையை உணர நீர் தந்த ஞானத்துக்காக நன்றி சொல்கிறோம். உலக ஞானத்தின்படி வாழாமல், இறை ஞானத்தின்படி வாழ எங்களுக்கு அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
அருள்தந்தை குமார்ராஜா