எதிர்பார்ப்புகள்

சோதோம், கொமோரா ஆகிய இரண்டு நகர்களும் அழிக்கப்படுவதை தொடக்கநூல் 19: 23 – 29 ல் பார்க்கிறோம். இந்த இரண்டு நகர்களும் அழிக்கப்பட்டதற்கு காரணம் விருந்தோம்பல் பற்றிய சட்டத்தை மீறியதுதான். விருந்தோம்பல் என்பது இஸ்ரயேல் மக்களுக்கு முக்கியமானது. வருகிறவர்களை அழைத்து நல்லமுறையில் உபசரிக்க வேண்டும். ஆனால், வரவேற்கவேண்டியவர்களே, அவர்களை தங்களின் ஆசைக்கு இணங்கச்செய்ய முயற்சி செய்தபோது, அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அந்த வேளையில் ஆபிரகாம் அவர்களுக்காக மன்றாடுகிறார் (தொடக்கநூல் 18: 16). ஆனாலும், மனம்மாறவேண்டியவர்கள் வாய்ப்பினைப் பயன்படுத்தவில்லை.

அந்த இரண்டு நகர்களில் உள்ளவர்களும் கடவுளின் செய்தி அவர்களுக்கு தரப்பட்ட போது அதை பொருட்படுத்தவில்லை. வாழ்வு தரும் வார்த்தைக்கு செவிமடுக்கவில்லை. ஒருவேளை கடவுளின் மகன் சென்றிருந்தால், அவர்கள் ஒருவேளை மனம் மாறியிருக்கலாம். ஆனால், இங்கே கடவுளின் மகனான இயேசுவே நற்செய்தி அறிவிக்கிறார். கடவுளின் மகனே மக்களைத்தேடி வந்திருக்கிறார். அவர்களோடு உணவருந்துகிறார். தங்குகிறார். புதுமைகளும் அற்புதங்களும் செய்கிறார். அப்படியிருந்தும் மக்கள் கடவுளின் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது கடுமையான தண்டனைக்குரியது.

யாருக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறதோ, அவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, அதற்கான விளைவுகளும் அதிகமாக இருக்கும் கடவுளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சி எடுப்போம். இன்றைய வாழ்வில் மிகப்பெரிய பொறுப்புக்களில் இருந்து பணியாற்றக்கூடிய அரசியல் தலைவர்களுக்கு, அதிகமான பொறுப்பு உள்ளது என்பதை இது நமக்கு வெளிப்படுத்துகிறது. அந்த பொறுப்பிற்கு ஏற்றபடி, தங்களது வாழ்வை அவர்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.