எதிர்பார்ப்பின் உலகம்
எதிர்பார்ப்பு என்பது இந்த உலகத்தின் மதிப்பீடு. நாம் ஒருவருடைய உதவியைப் பெறுகிறோம் என்றால், நிச்சயம் அவர் நம்மிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பார். சாதாரண அரசு அலுவலகங்கள் இதற்கு சிறந்த உதாரணம். அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காக, ஏற்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் மக்களின் தேவைகளை சரிசெய்வதற்காக, மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொள்கிறவர்கள். ஆனால் நடப்பது என்ன? சாதாரணமான வேலைக்கும், நாகூசாமல் பெரும்பாலான அரசு ஊழியர்கள், எதையாவது கேட்டே பெற்றுக்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். ஆக, எதிர்பார்ப்பு என்பது, சாதாரண வாழ்க்கை நடைமுறையாகி விட்டது.
இப்படிப்பட்ட காலப்பிண்ணனியில் வாழும் நமக்கு இயேசுவின் போதனை சற்று எச்சரிக்கையாக அமைகிறது. எதையும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஒன்றை நாம் செய்கிறபோது, அது நமக்கு திரும்பச் செய்ய முடியாத மனிதர்களுக்குச் செய்வதுதான், எதனையும் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்வதற்கு சமமானதாக இருக்கிறது. வறியவர்கள், ஏழைகள், சாதாரண நிலையில் இருக்கிறவர்களுக்கு நாம் எதைக்கொடுத்தாலும், அவர்களால் நமக்கு திரும்ப கொடுக்க முடியாது. ஆனால், அவர்கள் வழியாக கடவுள் நமக்கு நிறைவாகக் கொடுப்பார். கடவுள் கொடுப்பார் என்பதற்காக அல்ல, மாறாக, கொடுப்பதே நமது ஆன்மாவிற்கு நிறைவு. அதற்காக நாம் மற்றவர்களுக்கு கொடுப்பதை, வாழ்வின் முக்கிய மதிப்பீடாக வைத்துக்கொள்வோம்.
கடவுளிடமிருந்து நாம் ஏராளமான காரியங்களைக் கொடையாகப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். கடவுள் நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது. நாம் எவ்வளவு தான், நன்றியற்றவர்களாக இருந்தாலும், கடவுள் நமக்கு வேண்டியதை, கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறார். இறைத்தந்தையிடமிருந்து கொடைகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் நாம், மற்றவர்களுக்கு கொடுத்து பயன்பெறுவோம்.