எண்ணங்கள் தூய்மையானதாக இருக்கட்டும்
யாக்கோபு 4:1-10
எண்ணங்கள் தூய்மையானதாக இருக்கட்டும்
இந்த உலகத்தில் நடக்கிற அநீதி, அக்கிரமங்களுக்கு ஒருவருடைய தீய எண்ணமே காரணமாய் இருக்கிறது என்று யாக்கோபு சொல்கிறார். உலக நாடுகளிடையே அமைதி இல்லை. குடும்பங்களில் சமாதானம் இல்லை. மனிதர்களுக்கு நிறைவு இல்லை. அடுத்தவரின் வளர்ச்சி கண்டு பொறாமை எண்ணம் குடிகொள்கிறது. இவற்றிற்கெல்லாம் காரணம், ஒருவருடைய உள்ளத்தில் இருக்கிற தீய எண்ணமே. இந்த தீய எண்ணம் ஒருவருக்குள்ளாக எப்படி வருகிறது? ஒரு மனிதர் எப்போது சிற்றின்ப ஆசைக்கு அடிமையாகுகிறாரோ, இந்த உலகத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்போது அவருக்குள்ளாக தீய எண்ணம் வருகிறது. ஆக, ஆசைகளை விடுப்பதே நல்ல எண்ணத்தோடு வாழ்வதற்கான அடித்தளமாகும்.
ஆசையை எப்படி விடுப்பது? போதுமென்ற மனம் தான், ஆசையை துறப்பதற்கான திறவுகோல். நாம் நிறைவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இருப்பதில் நிறைவு காண வேண்டும். இன்றைய நவநாகரீக உலகத்தில், மனிதர்களுக்கு நிறைவு இல்லை. ஒரு கோடி சேர்த்து வைத்தவனுக்கும் நிறைவு இல்லை. மேலும், மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறான். பல ஆயிரம் கோடி சம்பாதிக்கிறவனுக்கும் நிறைவு இல்லை. ஆசை அளவுக்கு அதிகமாய் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பதை வைத்து மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்கிற எண்ணத்திற்குள்ளாக மனித மனம் செல்வதில்லை. இதுதான் மனிதர்களின் அடிப்படை பிரச்சனையாக இருக்கிறது. மனிதர்களின் இந்த எண்ண ஓட்டத்தை அறிந்திருக்கிற அலகை, வெகு எளிதாக நம்மை தன்வயப்படுத்திவிடுகிறது. எனவே, இருப்பதில் நிறைவுள்ளவர்களாக வாழ்வோம் என்பதுதான், யாக்கோபு நமக்கு விடுக்கும் அழைப்பாக இருக்கிறது.
நம்முடைய வாழ்வில் இந்த சிந்தனை இருந்தால், நமக்கு எந்த ஒரு குறையும் இருக்காது. ஆசைக்கு எல்லை இல்லை. ஆனால், நம்முடைய மனதை நல்ல சிந்தனையோடு வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சமுதாயத்தில் ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால், கடவுள் நம்மை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார். நமக்கு இருக்கிற செல்வத்தைக் கொண்டு, அவர்களுக்கு உதவி செய்கிற, நல்ல எண்ணத்தை வளர்த்துக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்