எச்சரிக்கை: யாரையும் பாவத்தில் தள்ள வேண்டாம்
லூக்கா 17:1-6
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நாம் இருக்கும் இடங்களில் குற்றங்கள், வன்முறைகள், பாவங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. எங்குப் பார்த்தாலும் பாவம் செய்யும் கும்பல் குவிந்துக்கொண்டு இருக்கின்றது. யார் காரணம் இதற்கு? அவர்களே கற்றுக்கொண்டார்களா? இல்லை. பிறர் கற்றுக்கொடுத்தார்கள். நண்பர்களிடமிருந்து, பணிசெய்யுமிடங்களிலிருந்து, உறவினர்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் அது. இப்படி பிறருக்கு தவறான பண்புகளை கற்றுக்கொடுப்போரை இன்றைய நற்செய்தி வாசகம் எச்சரிக்கிறது. பிறரை பாவத்தில் தள்ளி விடுவோரை வன்மையாக கண்டிக்கிறது. நம்மால் யாரும் கெட்டுப்போகாத வாழ்க்கையை நாம் நடத்த வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? இரண்டு காரியங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
1. பாவச்சோதனை கொடுக்க கூடாது
பலர் தங்களோடு இருக்கும் நண்பர்களுக்கு பாவச்சோதனையை வழங்குகிறார்கள. மது குடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்பது நமக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் எண்ணிக்கை ஏன் கூடுகிறது? காரணம் பாவச்சோதனையை தூண்டும் நண்பர்கள்தான். யாருக்கும் சோதனையை நாம் கொடுக்க கூடாது. நம்மால் இரண்டு பேர் கெட்டுப்போனார்கள் என்றால் அது நமக்கு பெரும் கேடு. நம்மால் இரண்டு பேர் வாழ்வு பெற்றார்கள் என்றால் அது நமக்கு மிகவும் பெருமை.
2. பாவத்திற்கு இழுக்க கூடாது
ஒருசிலர் தங்களோடு பாவ வாழ்க்கை நடத்த ஒருசிலரை தவறான முறையில் இழுப்பர். தவறான உரையாடல்களை நிகழ்த்துவர். ஒருசிலர் சில சிறுவர் சிறுமிகளை தவறாகப் பாவத்திற்கு இழுப்பர். அவர்களில் உணர்ச்சிகளை தூண்டிவிடுவர். இதனால் அவர்கள் ஒட்டுமொத்த ஆளுமையை அழிப்பர். இது முற்றிலும் தவறானது. இது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
மனதில் கேட்க…
1. எத்தனை பேரை நான் இதுவரை பாவத்தில் விழச் செய்திருக்கிறேன்?
2. பாவச்சோதனை வழங்குவது, பாவத்திற்கு இழுப்பது இரண்டும் மன்னிக்க முடியாத குற்றங்கள் எனக்கு புரியுதா?
மனதில் பதிக்க…
பாவச் சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்கு கேடு(லூக் 17:1)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா