எக்காளம் முழங்கிடவே, உயரே ஏறுகின்றார் ஆண்டவர்
தியானப் பாடல் சிந்தனை : திருப்பாடல் 47: 1 – 3, 5 – 6, 7 – 8
இந்த திருப்பாடல் வெற்றி பெற்று மாட்சியுடன் அரியணையில் ஏறும் அரசரைப்பற்றிப் பாடக்கூடிய பாடலாக இருக்கிறது. நிச்சயம் இது மெசியாவின் வருகையில் நடக்கக்கூடிய நிகழ்வாகவே நாம் பார்க்கலாம். திருப்பாடல் ஆசிரியர் பின்னால் நடைபெற இருக்கிற நிகழ்வுகளை, முன்னரே கண்டுணர்ந்து எதிர்காலத்தில் நடைபெற இருக்கிறவற்றை ஆய்ந்து அறிந்து எழுதுகிறார்.
மெசியா இந்த உலகத்தை ஆள்வதுதான் தகுதியானதாக இருக்கும் என்பது ஆசிரியரின் கருத்து. அதற்காகத்தான் மக்கள் இத்தனை ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மெசியா இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே அரசராக இருப்பார். இந்த உலகத்திற்கே அதிபதியாக இருப்பார். அந்த நாட்களில் நீதியும், நேர்மையும் அரசில் துலங்கும். மக்கள் அனைவரும் நிறைவுடன் வாழ்வர். அந்த நாளை நாம் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருப்போம் என்பதுதான், இங்கே வெளிப்படுத்தப்படக்கூடிய செய்தி.
நமது வாழ்விலும், இந்த நம்பிக்கைச் செய்தி தான், நமது வாழ்வை நாம் தொடர்ந்து வாழ நமக்கு உதவியாக இருக்க வேண்டும். எவ்வளவோ இன்னல்களும், இடையூறுகளும் வாழ்வில் வந்தாலும், மகிழ்வோடு அதனை எதிர்கொள்ள நமக்கு, உறுதுணையாக இருக்க வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்