உவமை வாயிலாகப்பேசும் இயேசு
இயேசு இதுவரை மக்களிடம் பேசுகிறபோது உவமைகள் வாயிலாக, உருவகங்கள் வாயிலாகப் பேசுகிறார். உவமை என்பது புதிர் போன்றது. விடைக்கான செய்தி தரப்படுகிறது. அதை கேட்கிறவர் தனது அறிவைப்பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும். சற்று ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால், நிச்சயம் அவர்களால், உவமை வாயிலாக இறையாட்சித்தத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். அதுதான் உவமை. அதைத்தான் இயேசு தனது போதனையில் மக்களுக்கு அறிவிக்கிறார். மக்களாகவே உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்று, அவர் உவமை வாயிலாகப் பேசுகிறார்.
இயேசு இவ்வளவுகாலம் மறைமுகமாக, உவமை வாயிலாகப்பேசியவர், தனது கருத்துக்களை மறைமுகமாகப் பேசியவர் இன்றைய நற்செய்தியில், இதுநாள் வரை தான், மறைமுகமாக சொல்லி வந்த கருத்துக்களை நேரடியாக, வெளிப்படையாகச்சொல்கிறார். ”தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன்” என்பதுதான் அந்த செய்தி. இந்த செய்தியைத்தான், போதனைகள் வாயிலாக, தனது வாழ்வு மூலமாக மக்களுக்கு மறைமுகமாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தது, தந்தையின் அன்பை எடுத்துரைப்பதற்காக. தந்தையின் இரக்கக்குணத்தை வெளிப்படுத்துவதற்காக. தந்தையைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.
இயேசுவின் வருகை, கடவுளைப்பற்றிய உண்மையானப் பார்வையை நமக்குத்தந்துள்ளது. கடவுள் எந்த அளவிற்கு இந்த உலகத்தின் மீது அன்பு வைத்திருக்கிறார், அவர் மக்களை அதிகமாக அன்பு செய்கிறார் என்பது நமக்கு இதிலிருந்து தெரிகிறது.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்