உள்ளத்தில் உள்ள அன்பினால் குடும்பத்தை ஆதாயப்படுத்தலாம்
ஒரு ஊரில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த பெற்றோருக்கு 2 பெண் பிள்ளைகள் இருந்தார்கள். இவர்களின் மூத்த மகளுக்கு வரன் தேடி வந்தார்கள். அப்பொழுது பக்கத்து ஊரில் இருந்த ஒரு குடும்பம் இவர்களை அறிந்துக்கொண்டு அந்த மூத்த மகளை பெண் கேட்டு வந்தார்கள். அந்த பெண்ணின் தகப்பனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் அவர் விசாரித்த வரைக்கும் அந்த குடும்பமும் மிகவும் நல்ல குடும்பம் தான் என்று கேள்விப்பட்டார். அதனால் அந்த குடும்பத்துக்கு தன் மகளை கொடுக்க சம்மதித்தார்.
ஆனால் பெண்ணின் அம்மாவுக்கோ அதில் கொஞ்சம் விருப்பம் இல்லை ஏனென்றால் அந்த மாப்பிள்ளையோடு பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர் கள்.அதனால் பெரிய குடும்பமாக இருக்கிறது. நம் மகள் அங்கு வாழ்க்கை பட்டு போனால் நிறைய வேலை இருக்கும், எல்லோரையும் கவனிக்கும்
கூடுதலான பொறுப்பு இருக்கும், மகளுக்கு ஓய்வே கிடைக்காது என்று பல சிந்தனைகளால் பயந்தார்கள். ஆனால் அந்த பெண்ணின் தகப்பனோ இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்களும் ஒரு கிறிஸ்துவ குடும்பம், கடவுளுக்கு பயந்து நடப்பவர்கள். அதனால் நம் மகள் அங்கு திருமணமாகி போனால் நிச்சயம் நன்றாக இருப்பாள், என்றே நினைத்தார். அவர்கள் பேசி முடித்து திருமணம் நன்றாக நடைப்பெற்றது.
அம்மாவின் பேச்சை கேட்டு பயந்த மணமகள் அப்பாவின் ஆறுதலான சொல்லினாலும், ஆண்டவரின் வசனத்தை தன் இதயத்தில் பதித்து வைத்துக்கொண்டதாலும் தைரியமாக புதுவாழ்க்கையை ஆரம்பிக்க ஆரம்பித்தார்கள். தனது மாமனார்,மாமியாருக்கு எல்லா காரியத்திலும் கீழ்படிந்து நடந்து வந்ததால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாள். ஒவ்வொருவரின் தேவைகளையும் அறிந்து அதை செய்து கொடுத்தாள். அவர்கள் சொல்லும் முன்னே அவர்களின் மன விருப்பத்தை அறிந்து செயல்பட்டதால் எல்லோருக்கும் அவளை மிகவும் பிடித்துவிட்டது.
ஒருநாள் அவளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனபொழுது ஒவ்வொருவரும் அவள்மேல் காட்டிய அன்புக்கு அளவேயில்லை. அவளை தாங்கு தாங்கு என்று ஒவ்வொருவரும் தாங்கினார்கள். அப்பொழுது அந்த பெண்ணின் அம்மா தனது மகளை பார்க்க வந்தார்கள். தனது மகளை நலம் விசாரித்தார்கள். அக்குடும்பத்தில் உள்ளவர்கள் அவள்மேல் காட்டிய அன்பை பார்த்து தனது மகளிடம் இவர்கள் எப்பொழுதும் இதுமாதிரி அன்புக்காட்டுவார்களா? அல்லது எங்கள் முன் அன்பு இருக்கிற மாதிரி காட்டுகிறார்களா? என்று சந்தேகப்பட்டு கேட்டார்கள். அதற்கு அவள் இல்லை அம்மா எப்பொழுதும் என்னிடம் பாசமாகவே இருப்பார்கள். நானும் அவர்கள் சொல்லும் எல்லாம் வார்த்தைக்கும் கீழ்படிந்து ஆண்டவரின் வசனத்தின்படி நடந்துக்கொண்டேன். அதனால் அவர்களும் உண்மையிலேயே என்மேல் அன்பாக இருக்கிறார்கள்,என்று சொன்னாள்.
அப்பெண்ணின் பெற்றோருக்கு மிகுந்த சந்தோஷம். அப்பொழுது அப்பா சொன்னார்கள். நிறையபேர்கள் இருக்கிறார்கள் என்று இந்த குடும்பம் வேண்டாம் என்று சொன்னாயே, இப்பொழுது பார் நம் மகள் இந்த குடும்பத்தில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள். ஒவ்வொருவரும் எப்படி நம் மகளை கவனித்துக்கொள்கிறார்கள். பார்க்க, பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. உன்பேச்சை கேட்டு அன்று நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்று நானும் நம் பெண்ணை இங்கு கொடுக்காமல் இருந்திருந்தால் அவள் சந்தோஷத்தை இப்பொழுது காண்பதுபோல் காணமுடியுமா?
நாம் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தோமானால் அப்பொழுது நம் வாழ்க்கையை முற்றிலும் ஆண்டவர் பொறுப்பெடுத்துக்கொண்டு நாம் நினைப்பதற்கும்,வேண்டிக்கொள்வதர்க்கும் அதிகமாக ஆண்டவர் செய்வார். ஒவ்வொரு பெண்ணும் தன் இதயத்தில் உள்ள அன்பினாலும், பொறுமையினாலும் நடந்து தனது குடும்பத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளலாம்.
மாறாக,மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும், அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது.1 பேதுரு 3:4.