உள்ளத்தின் நிறைவு !
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ்ப் பொன்மொழி. அகத்தின் அழகு நம் வாய் பேசும் சொற்களில் இருக்கிறது என்கிறது விவிலியம். நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனி கொடுக்கும். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் என்கிறார் ஆண்டவர். நமது வாயிலிருந்து வரும் சொற்கள்தான் நமது உள்ளத்தின் நிறைவை, அல்லது குறைவைச் சுட்டிக்காட்டுகின்றன. நமது சொற்கள் குறைவுள்ளவையாக, கண்ணியம் குறைந்தவையாக, இழிவானவையாக, புண்படுத்துவனவாக இருக்கின்றனவா? அப்படியென்றால், அது நம் உள்ளத்தின் குறைவைத்தான் காட்டுகிறது.
எனவே, நமது சொற்களின்மீது ஒரு கண் வைப்போமா? நல்ல சொற்களைப் பேசி நமது உள்ளத்தின் நிறைவை வெளிப்படுத்துவோம். நமது உள்ளத்தையும் நல்ல எண்ணங்களால் நிரப்பி, நிறைவு செய்வோம்.
மன்றாடுவோம்: உள்ளத்தின் ஆழத்தைக் காண்கிறவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும் என்று மொழிந்தீரே. எங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். அந்த உள்ளத்திலிருந்து நாங்கள் பிறரைப் பாராட்டுகின்ற, ஊக்குவிக்கின்ற, வளர்த்துவிடுகின்ற சொற்களைப் பேச உமது தூய ஆவி என்னும் கொடையை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
அருள்தந்தை குமார்ராஜா