உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்
திருப்பாடல் 117: 1, 2
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபோது, அவரது தொடக்க முழக்கமாக அமைந்தது: ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான். இன்றைய தியான வாக்கியமும், உலகமெல்லாம் சென்று, படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புவிடுக்கிறது. நற்செய்தி என்றால் என்ன? இயேசு அறிவிக்க வந்த நற்செய்தி என்ன? லூக்கா 4: 18 ம் இறைவார்த்தையில் அந்த நற்செய்தியை இயேசு அறிவிக்கிறார். அதாவது, ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்நிலையில் இருப்போர் அனைவரையும் கடவுள் அன்புசெய்கிறார். அவர்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்களும் முழுமையாக அன்பு செய்யப்பட வேண்டும் என்பதுதான், இயேசுவின் நற்செய்தி.
ஏன் இந்த நற்செய்தி உலகம் முழுவதிலும் அறிவிக்கப்பட வேண்டும்? இந்த உலக கண்ணோட்டத்தின்படி பார்க்கிறபோது, பல மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதனால், அவர்கள் வாழ்க்கை முழுவதுமாக ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இனி வேறு வாழ்வே இல்லை என்பது போன்ற தவறான பார்வைகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும், மீ்ண்டும் செய்த தவறுகளையே செய்வதற்கு, வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்களை ஆதிக்க உலகம், பாவி என்று முத்திரை குத்தி, அவர்களை சமுதாய வாழ்க்கையிலிருந்து ஒதுக்கிவைக்கிறது. இப்படிப்பட்ட மக்கள், உலகின் பல இடங்களில் நடைபிணங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை அன்பும், ஆதரவும், அரவணைப்பும். அது அவர்களுக்கு கிடைப்பதற்கு வழிசெய்வதுதான், நாம் அறிவிக்கப்போகிற நற்செய்தி. அதாவது, கடவுள் உங்களை அன்பு செய்கிறார் என்கிற செய்தி.
கடவுள் நம்மை எப்பொழுதும் அன்பு செய்கிறார். நமது இன்பத்திலும், துன்பத்திலும் அவர் நம்மோடு இருந்து, நம்மை கரம்பிடித்து வழிநடத்துகிறார். எந்நாளும் அவரது கரம் நம்மோடிருக்கிறது. அந்த அன்பை நாமும் மகிழ்ந்து, அடுத்தவர்களுக்கும் அந்த அன்பைப் பகிர்ந்து வாழ்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்