உலகெங்குமுள அனைவரும் விடுதலையைக் கண்டனர்
திருப்பாடல் 98: 1, 2, 3, 3 – 4
இந்த உலகம் முழுவதையும் படைத்து பராமரித்துக்கொண்டிருக்கிறவர் நம் ஆண்டவராகிய கடவுள். அவருடைய பார்வையில் அனைவருமே விலையேறப்பெற்றவர்கள். அனைவருமே அவருடைய பிள்ளைகள். அவர் இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்தது பாரபட்சம் காட்டுவதற்காக அல்ல. மாறாக, அவர்கள் வழியாக இந்த உலகத்திற்கு மீட்பு கொண்டு வருவதற்காக. இஸ்ரயேல் மக்களையும் ஆண்டவர் தண்டித்தார். எப்போதெல்லாம் அவர்கள், கடவுள் விரோதச் செயல்களில் ஈடுபட்டார்களோ அப்போதெல்லாம், அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை வருவித்தார்.
கடவுள் இஸ்ரயேலம் மக்களைத் தேர்ந்தெடுத்தது, அவர்கள் ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதற்காகத்தான். நாம் வாழும் இந்த உலகில் மிகப்பெரிய பொறுப்புக்கள் யாருக்கு கொடுக்கப்படுகிறது? வலிமையானவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், பணபலம் மிக்கவர்கள். ஆனால், கடவுளின் பார்வையில் இஸ்ரயேல் மக்கள் தயவு பெற்றிருந்தனர். அவர்கள் கடவுளின் விலைமதிப்பில்லா பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டனர். அவர்கள் மீட்பின் வரலாற்றில், மிகப்பெரிய பொறுப்பை சுமந்து கொண்டிருந்தனர். அந்த பொறுப்பை ஒரு சில வேளைகளில் அவர்கள் சரிவரச் செய்யாதபோது, உணர்த்தப்பட்டனர். தண்டிக்கப்பட்டனர். நெறிப்படுத்தப்பட்டனர். இறுதியில், அவர்கள் வழியாக இந்த உலகமும் மீட்பு பெற்றது.
நம்முடைய வாழ்வில், கடவுள் நமக்கு பல நன்மைகளைச் செய்து வந்திருக்கிறார். கடவுளின் அன்பைப் பெற்ற நாம், தவறு செய்கிறபோது, அவருடைய தண்டைனையையும் பெற்றுக்கொள்வது நியாயமானது. கடவுள் நம்மை எப்போதும் அன்பு செய்கிறார். நம் வழியாக கடவுளின் அன்பு மற்றவர்களுக்கு கிடைக்கட்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்