உலகம் தரமுடியாத அமைதி
தனி மனிதர்களும், சமூகங்களும், நாடுகளும் நாடித் தேடும் ஒன்று அமைதி. பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், பல நாடுகளும் போர்களாலும், உள்நாட்டுக் குழப்பங்களாலும் அமைதியின்றி தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியத் திருநாடுகூட, பொருளாதார வளர்ச்சி பெற்றாலும், அண்டை நாடுகளாலும், தீவிரவாதத்தாலும் அமைதியின்றித் தவிக்கின்றது. ஆயுதங்களால் உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியாது. உறவால்தான் முடியும்.
குடும்பங்களிலும் இன்று அமைதியற்ற சூழல். கணவன்-மனைவிக்கிடையே, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே அமைதியின்றி வாழும் நிலை காண்கிறோம். பணமோ, பொருள்களோ அமைதியைத் தர இயலாது. உறவுதான் அமைதியைத் தரும். முதலில், இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது, உலகம் தர இயலாத அமைதியை அவர் நமக்குத் தருவார்.
மன்றாடுவோம்: அமைதியின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் விரும்பித் தேடுகிற அமைதியை, நீர் மட்டுமே தரமுடிகின்ற அமைதியை எங்கள் நாட்டுக்கும், குடும்பங்களுக்கும், எங்களுக்கும் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~அருட்தந்தை குமார்ராஜா