உலகத்தை ஜெயிப்பவர்கள் யார் ? யார் ?
கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ ? கடவுள் தெரிந்துக்கொண்டவர்களுக்கு எதிராக யார் குற்றம் சாட்ட இயலும் ? அவர்களை [ நம்மை ] குற்ற மற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே! நமக்கு எதிராக யார் தண்டனை தீர்ப்பு அளிக்க இயலும் ? நமக்காக இறந்து உயிருடன் எழுப்பப்பட்டு இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காக பரிந்து பேசுகிறார் அல்லவா! நம்மேல் அன்புக் கூர்ந்தவரின் செயலால் நாம் வெற்றி மேல் வெற்றி பெற்று அனைத்திலும் ஜெயிப்பவர்களாக இருக்கிறோம்.உரோமையர் 8 : 31 to
37 ல் வாசிக்கலாம்.
கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது நம்முடைய மன உறுதியான நம்பிக்கையால் இந்த உலகத்தை ஜெயிக்கலாம். இந்த உலகில் இருப்பவனிலும் நம்மில் இருப்பவர் பெரியவராயிற்றே! பவுலும், சீலாவும் தெசலோனிக்காவில் ” இயேசுவே அந்த மெசியா என்று அறிவித்த பொழுது இதோ உலகத்தை கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்துவிட்டார்கள் என்று சொல்வதாக தி.பணிகள் 17:6 ல் வாசிக்கிறோமே! . கிறிஸ்துவின் நாமத்தினால் நாமும் இந்த உலகத்தை ஜெயித்து உலகத்தை கலக்கலாமே!
போர் நாளுக்கென்று குதிரையை ஆயத்தமாக வைத்திருக்கலாம். ஆனால் வெற்றியோ [ ஜெயமோ ] ஆண்டவரால் அல்லவா வரும். நீதிமொழிகள் 21:31. நாம் விவிலியத்தை நன்றாக தினந்தோறும் வாசித்துப் பார்ப்போமானால் உலகத்தை ஜெயிக்கும் ரகசியத்தை அறிந்துக் கொள்ளலாம். உங்கள் கையில் உள்ள விவிலிய புத்தகம் பழையது ஆக,ஆக உங்கள் வாழ்க்கை புதுப்பொழிவுடன் மாறும். அது அப்படியே புதுசாகவே இருந்தால் நமது வாழ்க்கை பழையது ஆகவே எந்த ஒரு முன்னேற்றம் இல்லாமல் இருக்கும். இதுதான் அதன் இரகசியம்.
ஆபிரகாம் சோதிக்கப்பட்ட வேளையிலும் பற்றுறுதி உள்ளவராய் இருந்து இறைவனுக்கு ஏற்புடையவராக ஜெயிக்கவில்லையா ? யோசேப்பு தமக்கு இடர்பாடு நேரிட்ட காலத்தில் கட்டளையைக் கடைப்பிடித்து எகிப்தின் ஆளுநராக ஜெயிக்கவில்லையா? பினகாசு பற்றார்வம் மிக்கவராக இருந்து என்றுமுள குருத்துவத்தின் உடன்படிக்கையை பெற்றுக்கொள்ளவில்லையா ? யோசுவா கட்டளையை நிறைவேற்றி இஸ்ரேலில் நீதித்தலைவராக ஜெயிக்கவில்லையா ? காலேபு சபைமுன் சான்று பகர்ந்து கடவுளுக்கு உகந்தவன் என்ற பெயருடன் ஒரு நாட்டையே பெற்றுக்கொள்ளவில்லையா ? தாவீது தம் இரக்கத்தால் முடிவில்லா அரசின் அரியணையை பெற்றுக்கொண்டாரே! எலியா திருச்சட்டத்தின் மேல் உள்ள பற்றார்வத்தால் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரே ! தானியேல் சிங்க குகையில் இருந்தும், அவருடைய நண்பர்கள் மூவரும் [ அனனியா , அசரியா , மிசாவேல் ,] தீயினின்றும் காப்பாற்றப்பட்டார்களே!
அன்பானவர்களே! இதுமாதிரி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். கடவுளை நம்பினோர் ஆற்றலில் சிறந்தோங்குவர் என்பதை ஒவ்வொரு தலைமுறையிலிருந்தும் நாம் பார்க்கலாமே!தீவினை புரியும் மனிதனின் சொல்லுக்கு அஞ்சாதீர்கள். அவனது பெருமை கழிவுப் பொருளாக மாறும். புழுவுக்கு இரையாகும். ஒருவேளை அவன் இன்று உயர்த்தப்படலாம் ,நாளை விசாரித்தால்
அவன் அடையாளமின்றி போய்விடுவான். தான் உண்டான மண்ணுக்கே போய்விடுவான். அவனுடைய திட்டங்கள் செயல்கள் யாவும் ஒழிந்துப் போகும். ஆனால் நாமோ நம்முடைய ஆண்டவர் அருளிய திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் மனவுறுதியும், வலிமையும், கொண்டால் இந்த உலகத்தை ஜெயித்து அதனால் மாட்சி அடையலாம். ஜெயம் பெறுவோர் இவற்றை உரிமைப் பேறாகப் பெறுவர். எல்லாம் வல்லவர் நமக்கு கடவுளாய் இருப்பார். நாம் யாவரும் அவருடைய பிள்ளைகளாய் இருப்போம்.
ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவரும், அரசருக்கெல்லாம் அரசரும் ஆனவரே ! உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், ஆராதிக்கிறோம் இதோ, இந்த உலகத்தின் ஆட்சி உரிமை நம் ஆண்டவருக்கும், அவருடைய மெசியாவிற்கும் உரியதாயிற்றே! நீரே என்றென்றும் ஆட்சிபுரிவர் ” ஆயிற்றே, வெற்றி மேல் வெற்றி கொள்ளும் தேவாதி தேவன் நீரே! யூதா குலத்தின் சிங்கமும், தாவீதின் குலக்கொழுந்து மானவர் நீரே! ஜெயத்தின் மேல் ஜெயம் எடுக்கும் கடவுள் நீரே! உம்முடைய வாழ்வின் நூலில் எங்களுடைய பெயர்களை பொறித்து வைத்திருப்பதால் உமக்கு கோடி நன்றிகள் சொல்கிறோம். இயேசுவே கிறிஸ்துவே நீர் வெற்றிப்பெற்று உமது தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல , வெற்றிபெறும் எங்களையும் உம்மோடு அமரச் செய்யும் உமது கிருபைக்காக வணங்குகிறோம்.பாவிகளாகிய எங்கள்மேல் இரக்கம் கொண்டுள்ள உமது தயவிற்கு தாழ்பனிகிறோம் . இந்த உலகத்தை ஜெயிக்கும் இரகசியத்தை எங்களுக்கு போதித்ததற்காக உமக்கு நன்றி பலிகளை ஏறேடுக்கிறோம் . துதி, கனம், மகிமை யாவும் உம் ஒருவருக்கே உண்டாகட்டும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் தந்தையே!
ஆமென்! அல்லேலூயா!!