உறுதியான எண்ணம்
நம்பிக்கை என்கிற வார்த்தையே ஒரு நேர்மறையான வார்த்தையாக இருக்கிறது. அந்த வார்த்தையே ஒருவரைப் புகழ்ந்து சொல்வதற்கு போதுமானது. ஆனால், இயேசு அதனைவிட பெரிய வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ”உமது நம்பிக்கை பெரிது” என்று சொல்கிறார். இதனுடைய பொருள் என்ன? இதனை நாம் எப்படி புரிந்து கொள்ளலாம்? இங்கே ”பெரிது” என்கிற வார்த்தையை ”உறுதி” என்கிற அர்த்தத்தோடு பொருத்திப்பார்த்தால், சரியானதாக தோன்றுகிறது.
அந்த பெண்ணின் நம்பிக்கைக்கு பல சோதனைகள் வருகிறது. இயேசுவின் வார்த்தைகளை சற்று எதிர்மறையாக எடுத்தாலும், நிச்சயம் நம்பிக்கையை அசைத்துப் பார்ப்பதாக அமைந்துவிடும். ஆனால், அந்த பெண் உறுதியாக இருக்கிறார். விடாப்பிடியாக இருக்கிறார். எதற்கும் சாயாது, துணிவோடு இருக்கிறார். காரணம், எதை அடைய வேண்டுமோ, அந்த இலக்கில் அவள் உறுதியாக இருக்கிறாள். இப்போதைக்கு அவளது மகள் குணமடைய வேண்டும். அதற்காக எதனையும் செய்வதற்கு தயாராக இருக்கிறார். கொண்ட எண்ணத்தில் பற்றுறிதியாய் இருக்கிறாள். அந்த எண்ணம் தான், இயேசுவுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. அதற்கான பலனையும் அவள் பெற்றுக்கொள்கிறாள்.
நமது எண்ணங்கள், நாம் நமது வாழ்க்கையில் வைத்திருக்கக்கூடிய இலக்குகள் தெளிவாக, உறுதியானதாக இருக்கிறதா? எத்தனை சங்கடங்கள் வந்தாலும், அதில் உறுதியாக இருக்கிறோமா? இல்லையெனில் சோர்ந்து போகிறோமா? வாழ்வில் உறுதியாக இருந்து, கொண்டிருக்கிற எண்ணத்தை செயல்படுத்தி, வெற்றி பெற, இறைவனிடம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்