உறவை வலுப்படுத்த முயற்சி எடுப்போம்
இயேசுவிடம் பார்வையற்ற ஒருவரை அழைத்து வருகிறார்கள். இயேசு அவரை தனியே ஊருக்கு வெளியே அழைத்துச்செல்வதை பார்க்கிறோம். வழக்கமாக மக்கள் மத்தியில் அனைவரும் விசுவாசம் கொள்ளும்பொருட்டு, விசுவாசத்தின் அடிப்படையில் குணம்கொடுக்கும் இயேசுவின் இந்த செயல் சற்று வித்தியாசமானதாகவும், விசித்திரமானதாகவும் இருக்கிறது. ஏன் இந்த மாறுபாடான செயல்? பொதுவாக, நல்ல மருத்துவர் என்று மக்களால் பாராட்டப்படுகிறவர், அதிகமாக படித்தவர் என்பதில்லை, மாறாக எந்த மருத்துவர் நோயாளிகளின் உணர்வுகளைப்புரிந்துகொண்டு, மருத்துவம் செய்கிறாரோ அவர்;தான் மக்கள் நடுவில் சிறந்தவராக கருதப்படுகிறார். நோயாளியின் உணர்வுகள், அவரது பயம், அவரது கவலை அடிப்படையில் மருத்துவம் செய்கின்றபோது, நோயாளி உடனடியாக குணமடைந்துவிடுவார். ஆனால், இந்த கலை எல்லாருக்கும் இருப்பதில்லை.
இயேசு சிறந்த மருத்துவர். அவர் பார்வையற்ற அந்த மனிதரின் உணர்வுகளை நிச்சயமாக புரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப்புதுமையில் இயேசுவிடம் இரண்டு வேறுபாடுகளைப்பார்க்கிறோம். 1. இயேசு அந்த மனிதரை தனியே அழைத்துச்செல்கிறார். 2. உடனடியாக பார்வையைக்கொடுக்காமல், இரண்டு நிலைகள் தாமதித்துப்பின் பார்வை கொடுக்கிறார். இயேசுவின் இந்தப்புதிய மாற்றத்திற்கு காரணம்: பார்வையற்ற மனிதருக்கு மக்கள் கூட்டம் பயஉணர்வைத்தந்திருக்கலாம். அல்லது இதுநாள் வரை பார்வையற்றவராக இருந்துவிட்டு, மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டு இனிப்பார்வை கிடைக்க வழியே இல்லை என்ற எண்ணத்தோடு வாழப்பழகிவிட்ட அவருக்கு, திடீரென்று அவருடைய வாழ்வில் பெரிய அதிசயம் நடக்கிறபோது, அது அவருக்கு பாதிப்பாகக்கூட முடியலாம். ஒரு நல்ல மருத்துவராக இயேசு அவரது உணர்வுகளைப்புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுகிறார். பார்வையற்றவருக்கு பார்வை கொடுத்து அவரது வாழ்வில் வசந்தம் மலரச்செய்கிறார்.
மற்றவர்களின் உணர்வுகளைப்புரிந்து நடப்பது ஒரு கலை. கேட்பவரின், பேசுபவரின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது உறவை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. உணர்வுகளைப்புரிந்து வாழும் அருளை இறைவனிடம் வேண்டுவோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்