உறவுகளோடு உறவாடுவதில் வித்தியாசம் நல்லதா?
நாம் எல்லா உறவுகளையும் சரிசமமாக பார்ப்பதில்லை. அறவே தெரியாதவர்களோடு நம் உறவு என்பது மிகவும் தூரமாக இருக்கும். ஓரளவு தெரிந்தவர்களோடு நமது உறவு ஓரளவு நெருக்கமாக இருக்கும். நண்பர்களோடு நம் உறவு பக்கமாகவே இருக்கும். நம் உடன்பிறப்புகளோடு நம் உறவைப் பற்றி சொல்லவே வேண்டாம் அது மிகவே நெருக்கமாக இருக்கும். நம் உறவுகளை வைத்து நம் பழக்கத்தில் வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறோம். இப்படிப்பட்ட வித்தியாசத்தை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதை சிறிது மாற்றலாம் என ஒரு வித்தியாசமான சிந்தனையைக் கொண்டு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்கள் கூட்டத்தோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவருடைய தாய் மற்றும் சகோதரர்கள் வருகிறார்கள். அவர்களுடைய வருகையானது அவருக்கு சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் அவரது உள்ளம் உயர்ந்து போகவில்லை, குரலில் ஆனந்த சத்தம் கேட்கவில்லை. அவர் இயல்பாகவே இருந்தார். ஒரு வித்தியாசத்தை வெளிப்படுத்தவில்லை. உறவுகளிலே எல்லாருக்கும் ஒரே முக்கியத்துவத்தை அவர் கொடுத்தார். அவருடைய குடும்பத்திற்கென்று சிறப்பான வரத்தையோ, மரியாதையையே, வேலைவாய்ப்பையோ அவர் பெற்றுக்கொடுக்கவில்லை.
நம்முடைய வாழ்க்கையை பரிசோதித்து பார்க்கும் போது அனைத்தையும் நாம் நம்முடைய குடும்பத்திற்கு மட்டுமே பெற்றுக்கொடுப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். சிறப்பான வரத்தையும் மரியாதையையும், வேலைவாய்ப்பையும் நம் குடும்பத்திற்கு பெற்றுகொடுக்கவே நாம் ஓடுகிறோம். அந்த ஓட்டத்தை நிறுத்தி எல்லாருக்காவும் ஓடுவோம். உறவுகளில் வித்தியாசம் காண்பதை விரட்டுவோம்.
மனதில் கேட்க…
• என் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் ஏன் தனி மரியாதை?
• இயேசு செய்ததை செய்து பார்க்கலாமா?
மனதில் பதிக்க…
உங்கள் கடவுளாகிய ஆண்டவர், தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவனுக்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுதற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை(எண்10:17)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா