உறவின் முக்கியத்துவம்
உறவு என்பது எவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த உறவில் விரிசல் ஏற்பட்டால், அதை சரிசெய்வதற்கு நாம் எந்தளவுக்கு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20) இயேசு நமக்குத்தருகிறார். இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள் அனைவருமே, தனித்தன்மை வாய்ந்தவர்கள். சிந்திக்கக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள். கருத்துக்களை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவர்கள். பலவிதப் பிண்ணனிகளைக் கொண்டவர்கள். இந்த சூழல், பலவிதமான கருத்துக்கள் வெளிவருவதற்கு காரணமாக இருக்கிறது. அப்படி வருகிறபோது, ஒருவருடைய கருத்தும், மற்றவருடைய கருத்தும் முரண்பாட்டைச் சந்திக்கிறது. அங்கே உறவுச்சிக்கல் உண்டாகிறது.
அந்த உறவுச்சிக்கல் பொதுவானது, இயற்கையானது என்பதை நாம் அடிப்படையில் உணர வேண்டும். நம்மில் வேற்றுமை இருப்பது நாம் அறிந்த ஒன்று. அனைவருமே ஒரே மாதிரியாகச் சிந்திக்க முடியாது. அப்படி நமக்குள்ளாக கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறபோது, அது உறவு விரிசலுக்கு அடிகோலிடுகிறபோது, அதை நாம் எளிதாக விட்டுவிடக்கூடாது. அந்த உறவு விரிசலை சரிசெய்ய நாம் அனைவருமே முன்வர வேண்டும். ஒருவர் மற்றவருடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, விரிசல்களை களைய முற்பட வேண்டும். ஏனென்றால், உறவுதான், வாழ்வின் ஆணிவேர். அத்தகைய உறவுக்கு நமது வாழ்வில் முதலிடம் கொடுக்க வேண்டும் என்பது, இயேசுவின் வாதம்.
நமது வாழ்வில் உறவைச் சரிசெய்ய முயற்சி எடுக்கிறோமா? அல்லது உறவைச் சிதைக்கக்கூடிய காரியங்களில் ஈடுபடுகிறோமா? சிந்திப்போம். உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உலகின் போக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தால், அது இயேசுவின் விழுமியங்களுக்கு எதிராகச்செல்வதாகத்தான் இருக்கும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்