உரிமைச்சொத்து
திருப்பாடல் 33: 12 – 13, 18 – 19, 20, 22
கடவுளை தம்முடைய தலைவராக தேர்ந்து கொண்ட இனமும், ஆண்டவர் தன்னுடைய உரிமைச்சொத்தாக தேர்ந்து கொண்ட இனமும் பேறுபெற்றது என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். இந்த பாடலானது, அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட பாடல். இஸ்ரயேல் மக்களின் அனுபவத்தை வெளிப்படுத்தும் பாடல். அவர்கள் கடவுளை தங்களது ஆண்டவராக தேர்ந்தெடுத்தனர். கடவுளும் அவர்களை தன்னுடைய உரிமைச் சொத்தாக தேர்ந்தெடுத்தார்.
கடவுளுடைய அன்பு இஸ்ரயேல் மக்களுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. ஏனென்றால், கடவுள் அவர்களை அன்பு செய்தார். பஞ்சத்திலிருந்து அற்புதமாக அவர்களை வழிநடத்தினார். எகிப்தின் உணவுப்பொருட்களுக்கு பொறுப்பாளராக யோசேப்பை நியமித்தவரும் அவரே. இதன் வழியாக, இஸ்ரயேல் குலம் முழுமைக்கும் தங்கு தடையின்றி உணவு கிடைக்க வழிவகை செய்தார். எதிரிகள் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக போர் தொடுத்து வந்தபோதிலும், அவர்களை துவம்சம் செய்து, இஸ்ரயேல் மக்களை பாதுகாத்தவர் ஆண்டவரே. ஏனென்றால், அவர் அவர்களை அந்த அளவுக்கு அன்பு செய்கிறார்.
நம்முடைய வாழ்வில் நாமும் கடவுளை நம்முடைய ஆண்டவராக ஏற்றுக்கொள்வோம். அப்போது அவருடைய உரிமைச்சொத்தாக, அவர் மிகவும் நம்மை அன்பு செய்யக்கூடியவராக நாம் மாறுவோம். அவருடைய அன்பை முழுமையாகச் சுவைக்கிறவர்களாக நாம் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பாடலை நாம் தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்