உயிர்ப்பு தரும் நம்பிக்கை
கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை நம்பிக்கை உயிர்ப்பு. நற்செய்தியாளர்கள் உயிர்ப்பு என்னும் கண்ணாடி வழியாகத்தான் இயேசுவின் வாழ்வை நமக்கு, இறைவார்த்தையாக தந்திருக்கிறார்கள். இத்தகைய அடிப்படை நம்பிக்கைக்கு இன்றைய வாசகம் ஒரு மிகப்பெரிய சான்றைத்தருகிறது. அதுதான் வெற்றுக்கல்லறை. ஆயத்தநாளுக்கு முந்தைய நாள் இயேசுவை அடக்கம் செய்கிறார்கள். ஆயத்தநாளுக்கு அடுத்தநாள் விடியற்காலையில் பெண்கள் கல்லறைக்குச்செல்கிறார்கள். அங்கே ஆண்டவரின் உடலைக்காணவில்லை. கல்லறை வெறுமையாக இருந்தது.
கல்லறை வெறுமையாக இருந்தது என்றால், இரண்டு காரணங்கள் இருக்க முடியும். ஒன்று சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லது இயேசு உயிர்த்திருக்க வேண்டும். இயேசுவின் உடலை சீடர்கள் எடுத்துச்சென்றிருக்க வாய்ப்பில்லை. காரணம், மத்தேயு 27: 62 முதல் உள்ள இறைவார்த்தைகளில் நாம் பார்க்கிறோம்: தலைமைக்குருக்களும், பரிசேயர்களும் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள். காவலர்களின் பாதுகாப்பை மீறி, சீடர்களால் இயேசுவின் உடலை திருடியிருக்க முடியாது. அப்படியே, சீடர்கள் இயேசுவின் உடலை திருடியிருந்தாலும், அவர்கள் எங்கேயும் உடலை மறைத்திருக்க முடியாது. காரணம் அவர்கள் சாதாரண மனிதர்கள். பரிசேயர்களோ அதிகாரம் நிறைந்தவர்கள். எப்படியும் அவர்களின் பாதுகாப்பை மீறி அவர்கள் இயேசுவின் உடலை மறைத்து வைக்க முடியாது. எனவே, சீடர்கள் இயேசுவின் உடலை திருடியிருக்க வாய்ப்பில்லை. அப்படியானால், இயேசு எங்கே? அவர் சொன்னது போல உயிர்த்து விட்டார்.
துன்பங்கள் வாழ்வின் நிரந்தரம் அல்ல: துன்பத்திற்கு முடிவு உண்டு. துன்பத்திற்கு பின் இன்பம் உண்டு என்கிற நம்பிக்கைச்செய்தியை இயேசுவின் உயிர்ப்பு நமக்கு அறிவிக்கிறது. துன்பத்திற்கு நாம் தகுதியில்லாதவர்களாக இருக்கலாம். ஆனாலும், நமக்கு வருகிற துன்பத்தை பொறுமையோடு ஏற்று அதையும் மற்றவர்களின் மீட்புக்கு பொருளுள்ளதாக மாற்ற முடியும் என்கிற நம்பிக்கையையும், இது தருகிறது. எனவே, துன்பம் நமக்கு வருகின்றபோது, கவலைப்படாமல், நம்பிக்கையோடு வாழும் வரம்வேண்டுவோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்