உயிர்ப்பு தரும் அர்ப்பணம்
திருத்தூதர் பணி 15: 22 – 31
இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததில், தூய பவுலடியார் எந்த அளவுக்கு முன்மதியோடும், அர்ப்பண உணர்வோடும் செயல்பட்டார் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. ஒரு சிலர் மக்களை குழப்புகிற நேரத்தில், சரியானவிதத்தில் அதனைக் கவனித்து, அவர்களை தெளிவுபடுத்துவதற்காக, சரியான ஆட்களை அனுப்புகிறார். அதுமட்டுமல்லாது, தன்னுடைய கடிதத்தின் மூலமாகவும் சிறப்பாக அவர்களை வழிநடத்துகிறார். அவருடைய கடிதத்தை வாசித்துக் கேட்டவுடன், மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களது விசுவாசம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இறைமக்களை விசுவாசத்தில் கட்டியெழுப்ப, எவ்வளவுக்கு சாதாரண காரியங்களில் எல்லாம் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது, இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவிப்பதில் தன்னுடைய நேரம் முழுவதையும் செலவிட்டார். எந்த அளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிளம்பினாரோ, அதனை விட பல மடங்கு கிறிஸ்துவுக்காக உழைத்தார். பவுலின் இத்தகைய முழுமையான மாற்றத்திற்கான காரணத்தைத் தேடுகிறபோது, உயிர்ப்பு தான் நம்முடைய நினைவுக்கு வருகிறது. உயிர்த்த இயேசுவின் அனுபவம் அந்த அளவுக்கு, பவுலடியாருக்கு அர்ப்பண உணர்வைக் கொடுத்தது.
பவுலடியார் பெற்றுக்கொண்ட அந்த அர்ப்பண உணர்வு நம்முடைய வாழ்க்கையிலும் நமக்கு இருக்க வேண்டும். உயிர்ப்பு அனுபவம் நமதாக வேண்டும். இன்றைக்கு இறையனுபவத்தைப் பெறுவதற்காக எத்தனையோ மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இறையனுபவத்தைப் பெற வேண்டுமென்றால் நாம் முதலில் அந்த இறையனுபவத்தைப் பெற வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்