உயிர்ப்பும் திருமுழுக்கும் (யோவான் 3 : 1 – 8)
இயேசுவின் வாழ்வில் நிக்கதேமின் பங்களிப்பு அளப்பரியது. இவர் ஒரு பரிசேயராக இருந்தாலும் நேர்மையானவர். எனவேதான் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் ஆண்டவரைச் சிறைப்பிடிக்க ஆள் அனுப்பியதைக் கண்டித்து, ஆண்டவர் இயேசுவின் சார்பாகக் குரல் கொடுத்தார் (யோவான் 7 : 51) இவரின் முதல் சந்திப்பே இன்றைய நற்செய்தி.
நிக்கதேம் ஆணடவரின் உரையை முன்னரே கேட்டிருக்க வேண்டும். அவரது புதுமைகளைக் கண்டிருக்க வேண்டும். அவரே மெசியா என ஊகித்திருக்க வேண்டும். எனவேதான், “ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவேன். தன்னோடு கடவுள் இருந்தாலன்றி எவனும் நீர் செய்கிற அருங்குறிகளைச் செய்ய முடியாது” என்று தன் உரையைத் தொடங்குகிறார். ஆண்டவர் அப்படியே இறையாட்சியைப் பற்றியும், திருமுழுக்கின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விளக்குகின்றார். திருமுழுக்கிற்கும் இயேசுவின் உயிர்ப்பிற்கும் மிக நெருக்கமானத் தொடர்பு இருப்பது இதன் மூலம் இன்னும் வலுப்படுத்தப்படுகிறது.
திருமுழுக்கு வழியாக நாம் கிறிஸ்துவோடு இணைந்து விடுவதால் அவரது இறப்பிலும் உயிர்ப்பிலும் பங்கு கொண்டு, பழைய பாவ வாழ்வை அவருடன் கல்லறையில் புதைத்துவிட்டு புதுவாழ்வு பெறுகின்றோம் (உரோ 6 : 1-11). எனவே தான், “ஒருவர் தண்ணீராலும், தூய ஆவியாராலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது” என்கிறார் இயேசு. இப்பாஸ்கா காலத்தில் நமது திருமுழுக்கை நினைவுகூர்வது எத்தனை நன்று.
– திருத்தொண்டர் வளன் அரசு