உயிர்த்தெழ இரண்டு மட்டும் செய்வோம்…
லூக்கா 20:27-40
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
அனைவருக்கும் இந்த உலகை விட்டு செல்ல கூடாது, இளமைக் குறையாமல் பல ஆண்டுகள் இந்த உலகில் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. அந்த ஆசையை யாரும் பெற முடியாது. பிறந்த அனைவரும் இறந்தே ஆக வேண்டும். ஆனால் மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இறந்த அனைவரும் கிறிஸ்துவோடு ஒருநாள் உயிர்ப்போம் என்பதுதான். கிறிஸ்துவோடு உயிர்த்தெழ வேண்டுமென்றால் கிறிஸ்துவுக்கேற்ற இரண்டு காரியங்களை செய்ய வேண்டும் என சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். கேட்போம். செய்வோம். உயிர்த்தெழுவோம்.
1. முழுமைக்கு கொண்டு வா
எந்த செயல் செய்தாலும் முழு அன்போடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் முழு அறிவோடும் செய்ய வேண்டும். அரைகுறையாக செய்யாமல் முழுமையாக செய்ய வேண்டும். முழுமையாக நாம் செய்யும் செயல் வெற்றியைத் தரும். மனஉறுதியை வழங்கும். மண்ணக்தில் ஒருவர் செய்யும் இந்த செயல்தான் அவரை கிறிஸ்துவோடு உயிர்த்தெழ வைக்கும்.
2. முன்னுக்கு கொண்டு வா
நம்மோடிருக்கும் நபர்களை பின்னுக்கு தள்ளாமல் அவர்களை முன்னுக்கு கொண்டு வருவதில் நாம் அக்கறை கொள்ள வேண்டும். அடுத்தவர் வளர்ச்சியில் நாம் ஆனந்தம் கொள்ளும் பக்குவம் பெற்றால்தான் கிறிஸ்துவோடு நாம சேர முடியும். மண்ணக்தில் ஒருவர் செய்யும் இந்த செயல்தான் அவரை கிறிஸ்துவோடு உயிர்த்தெழ வைக்கும்.
மனதில் கேட்க…
1. நான் செய்யும் செயல்களை அரைகுறையாக செய்கிறேனா? முழுமையாக செய்கிறேனா?
2. இதுவரை என் வாழ்வில் யாரையாவது முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறேனா?
மனதில் பதிக்க…
அவர் இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே (லூக் 20:38)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா