உம் மக்கள் மீது இரங்கும்போது ஆண்டவரே, என்னை நினைவுகூறும்
திருப்பாடல் 106: 34 – 35, 36 – 37, 39 – 40, 43
கடவுளிடத்தில் செபிக்கிற மன்றாட்டுக்களில் இரண்டு விதமான மன்றாட்டுக்கள் இருக்கிறது. நிர்பந்தமில்லாத மன்றாட்டுக்கள், நிர்பந்தமுள்ள மன்றாட்டுக்கள். நிர்பந்தமில்லாத மன்றாட்டுக்கள் என்பது, கடவுளுக்கு பிரியமானால், இது நடக்கட்டும் என்கிற ஆழமான விசுவாசத்தில் வேரூன்றிய மன்றாட்டு. இப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்கிறவர்கள் மிகவும் குறைவு. அப்படி செபிப்பதற்கு நமக்கு நிறைய ஆன்மீக பலம் வேண்டும். புனிதர்களின் செபங்கள் இப்படிப்பட்ட செபங்கள் தான்.
நிர்பந்தமான மன்றாட்டு என்பதில் இரண்டு விதமான பிரிவுகளைப் பார்க்கலாம். ஒன்று தாழ்ச்சியுடன் கூடிய நிர்பந்தம், இரண்டாவது அதிகாரம் நிறைந்த நிர்பந்தம். இன்றைய திருப்பாடலில் வருகிற இந்த பாடல், தாழ்சியுடன் கூடிய நிர்பந்தமான மன்றாட்டாக இருக்கிறது. திருப்பாடல் ஆசிரியர் தவறு செய்திருக்கிறார். அந்த தவறுக்காக ஆண்டவரிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேவேளையில் கடவுளிடத்தில் தான் கேட்பதற்கு தகுதியற்றவனாக உணர்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுளுக்கு எதிராக நன்றியுணர்வு இல்லாமல் பாவங்கள் பல செய்த இஸ்ரயேல் மக்களை கடவுள் மன்னிக்கிறார். அப்படி மன்னிக்கிறபோது, தனக்கும் மனமிரங்குமாறு ஆசிரியர் செபிக்கிறார். இந்த தாழ்ச்சி தான், இறைவனுடைய மன்னிப்பை, அவருக்கு நிறைவாகப் பெற்றுத்தந்தது.
நாம் கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறபோது, கடவுளின் இரக்கத்திற்காக மன்றாடுகிறபோது, தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தைக் கேட்போம். அந்த தாழ்ச்சி நிறைந்த உள்ளம் நிச்சயம் நமக்கு இறைவனுடைய அருள நிறைவாகப் பெற்றுத்தரும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்