உம் பெயரின் மாட்சிமையை முன்னிட்டு கடவுளே எங்களை விடுவியும்
திருப்பாடல் 79: 1 – 2, 3 – 5, 8, 9
அடிமைத்தனத்தின் பிடியிலிருக்கிற இஸ்ரயேல் மக்களை கடவுள் விடுவித்தருள வேண்டுமென்று விடுக்கிற அழைப்பாக இந்த திருப்பாடல் அமைகிறது. பாபிலோனிய மன்னன் நெபுகத்நேசார் எருசலேமை தரைமட்டமாக்கினான். இஸ்ரயேலின் ஆண்களை அகதிகளாக பாபிலோனுக்கு நாடுகடத்தினான். எருசலேமை எவராலும் அழிக்க முடியாது என்கிற மமதை கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இந்த பாடல் எழுதப்பட்டிருக்கலாம்.
வாழ்வில் பலம் இருக்கிறவரை அல்லது பலம் இருக்கிறது என்பதை நம்புகிற வரையிலும், மற்றவர்களை எவரும் தேடமாட்டார்கள். வெற்றிக்கு தங்களின் பலம் தான் காரணம் என்கிற மமதை அவர்களின் எண்ணத்தில் குடிகொண்டு விடுகிறது. ஆனால், எப்போது பலத்தை இழக்கிறார்களோ, அல்லது மற்றவர்கள் இவர்களின் பலவீனத்தை அறிந்து இவர்களை வீழத்துக்கிறார்களோ, அப்போதுதான், தங்களது உண்மைநிலையை அறிந்தவர்களாக மாறுகிறார்கள். கடவுளைத்தேடி வருகிறார்கள். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் இது முற்றிலும் உண்மை. அவர்கள் வெற்றி பெற்ற வரையில், தங்களின் பலத்தினால் தான் வெற்றி பெற்றோம் என்கிற நம்பிக்கை கொண்டிருந்தனர். அது தவறு என்பது அவர்களது உள்ளத்திற்கு தெரிந்திருந்தாலும், அவர்களின் செருக்கு உண்மையை திரையிட்டு மறைத்தது. ஆனால், அவர்கள் பெற்ற அவமானமும், தோல்வியும் அவர்களுக்கு உண்மையை உரைத்தன. அந்த வலி தான் இன்றைய திருப்பாடல்.
நம்முடைய வாழ்விலும் நாம் எப்போதும் நம்முடைய பலத்தின் மீது நம்பிக்கை வைத்து, நம்முடைய வாழ்வை இழந்துவிடக்கூடாது. வாழ்க்கையில் கடவுள் என்கிற பிடிமானம் நமக்கு நிச்சயம் தேவை. அது இல்லையென்றால், நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. கடவுளை விடாது பற்றிக்கொள்ளும் வரம் வேண்டுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்